மறக்கக்கூடாத வரலாற்று சாதனை – பாடலாசிரியை உமாதேவி!!

News

மத்திய அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடெங்கிலும் உள்ள தலித் மக்களின் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்ற பெருந்திரளான போராட்டங்களில், வன்முறை ஏற்பட்டு 12 தலித்துகளும் கொல்லப்பட்டார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து தலித் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நேற்று சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் குறித்து பாடலாசிரியை உமாதேவி தனது கருத்துக்களை முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் உமாதேவி கூறியிருப்பதாவது,

“2018 ஏப்ரல் 24 ஆம் தேதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9 ஆவது அட்டவணையில்  இணைக்கக்கோரி “தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு” நடத்திய போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை கண்கூடாகப்பார்த்தேன். ஒரு தலைவர் முன்வர ஒரு தலைவர் பின்வர என்ற பூடகங்கள் இல்லாமல் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் அருளியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்தது மட்டுமல்லாமல் அனைத்து தலித் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து “எழுச்சி தமிழர்” எழுச்சியை நிகழ்த்திக்காட்டியுள்ளார். “சமூக சீர்திருத்தங்கள் தான் அரசியல் சீர்திருத்தங்களை உருவாக்கும்” என்ற அண்ணலின் வார்த்தைகள் ஐம்பது சதவிகிதம் அந்த மேடையில் நிறைவேறியதை உணர்ந்தேன்.

தலித் மக்களின் பிரமாண்ட போராட்டத்தை எந்த ஊடகங்களும் பதிவு செய்யாதது பெரியார் மண்ணின்  ஊடகங்கள் சாதிய ஊடகங்களாகத்தான் இருக்கின்றன என்பதே மீண்டும் அம்பலமாகியுள்ளது.

நமது தலைவர்கள் நமது கோரிக்கைக்காக முழங்கியது தலித் சமூகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. தலித் தலைவர்கள் சரியான பாதையில் நகர்கின்றபோது தலித் மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு பெருகும் என்பதற்கு திரளான இப்பேரணியே சான்று.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் வெற்றிக்கு, அனைத்து தலித் தலைவர்களின் பங்கேற்பும் மிகமுக்கிய காரணம். மேலும் இப்பேரணி  வெற்றியுடன் நிறைவடைய தலித் கட்சிகளிலும் இயக்கங்களிலும் உள்ள பலரும் உழைத்திருக்கின்றனர்.

வரலாற்று சிறப்பு மிக்க இப்போராட்டத்தை அடிப்படையில் ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்கள் தமிழக BSP தலைவர் அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில செயலாளரும் துடி இயக்கத்தின் பொதுச்செயலாளரும் ஆன DR.பாரதி பிரபு அவர்கள்.

தலித்துகளின் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருக்கலாம். ஆனால் தலித்துகளின் வரலாறு தலித்துகளாலேயே மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவையும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.