full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

உன்னிகிருஷ்ணன் நடிப்பில் யதார்த்தமான படமாக கும்கி 2

கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – லஷ்மி மேனன் நடிப்பில் உருவான `கும்கி’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு முதல் உருவாக்கி வருகிறார் பிரபு சாலமன். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

படம் குறித்து இயக்குநர் பிரபு சாலமன் பேசும் போது, “கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொட வேண்டி இருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2 படத்தின் கதையாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பேராடியும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் அனுமதி கிடைக்கல, அனுமதி கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக கும்கி 2 இருக்கும்.

வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்.” என்றார்.

இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.