full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு

சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

 

 

 

 

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.05.2020 அன்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்சர் என்னுடன் கலந்தாலோசித்தார்.

மேற்படி சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.05.2020 முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.

சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.