பாவனா, எஸ்தர் அனில் என இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் ஆடுகளம் நரேன். இதில் மூத்த மகளான பாவனா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு காரணமானவர்களாக கூறி 5 இளைஞர்களை போலீஸ் என்கவுண்டர் செய்கிறார்கள். இந்த விஷயம் பிரச்சனையாக மாற மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க உத்தரவு வருகிறது.செய்த தவறால் இடம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கலெக்டர் வரலட்சுமி மனித உரிமைகள் ஆணையம் சார்பாக இந்த கேசசை விசாரிக்க தொடங்குகிறார். இதில் பல உண்மைகள் வரலட்சுமிக்கு தெரிய வருகிறது. இறுதியில் பாவனா எப்படி கொலை செய்யப்பட்டார்? உண்மையில் கொலை செய்தது யார்? இதை எப்படி வரலட்சுமி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக வரும் சிவகாமி ஐஏஎஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் வரலட்சுமி. மிடுக்கான தோற்றமும் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. ஆனால் இவருக்கு அதிக காட்சிகள் இல்லாதது வருத்தம்.விந்தியா கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்த பாவனா நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். விஜி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தேர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். மகளுக்கு நடந்த கொடுமையை எண்ணி அழும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார் ஆடுகளம் நரேன்.
நாம் அன்றாடம் கடந்து செல்லும் கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அமுதவாணன். கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் திரையில் கவனம் செலுத்தாத வருத்தம். போலி என்கவுண்டர்கள், அரசியல்வாதிகளின் மற்றொரு முகம், அநீதி இழைக்கப்படும் பெண்களுக்கு நீதி என பல முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து சொல்லியதற்கு பாராட்டுக்கள்.சிவா பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. ஆலன் செபஸ்டீன் இசையில், பாடல்கள் அதிக அளவில் கவனம் பெறவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.