வடக்குப்பட்டி ராமசாமி’.- திரைவிமர்சனம்

cinema news movie review
0
(0)

வடக்குப்பட்டி ராமசாமி’.- திரைவிமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி மீண்டும் சந்தானம் காமெடி நாயகனாக நடித்து இருக்கும் படம் இந்த படம் வெளியாகும் முன்பே மக்களிடம் மிக பிரபலம் ஆக்கிவிட்டார்கள் நம்ம அரசியல் வாத்திகளும் ஆன்மீகவாதிகளும் மொத்தத்தில் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்து விட்டது.

சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேசு, தமிழ்,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி

சாமி இல்லை என்று சொல்லும் சந்தானத்திற்கு அந்த சாமியை வைத்தே சம்பாதிக்க கூடிய வாய்ப்பு அமைகிறது. அதை சரியாக பயன்படுத்தி தனது சொந்த நிலத்தில் ஒரு கோவிலை கட்டி, அதன் மூலம் ஊர் மக்களை ஏமாற்றி சம்பாதித்து வருகிறார். அந்த ஊர் மக்கள் அந்த கோவில் மற்றும் அதில் இருக்கும் சாமி மீது பக்தியோடும், நம்பிக்கையோடும் இருக்கிறார்கள்.

இதற்கிடையே சந்தானத்தின் பேராசையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரசு அந்த கோவிலை மூடி சீல் வைத்துவிடுகிறது. கோவில் மூடப்பட்டதால் ஊரில் பல பிரச்சனைகள் நடக்க, ஊர் மக்கள் சாமி நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையோடும், பக்தியோடு காத்திருக்கிறார்கள். ஆனால், சந்தானம் தனது சம்பாத்தியத்திற்காக அரசிடம் இருக்கும் கோவில் நிர்வாகத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சியில் இறங்குகிறார். இறுதியில் ஜெயித்தது மக்களின் பக்தியா? அல்லது சந்தானத்தின் புத்தியா? என்பதை வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்வது தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

சந்தானம் நாயகனாக நடித்திருந்தாலும், நாயகனுக்கான அடையாளங்கள் ஏதுமின்றி ஒரு கதாபாத்திரமாக நடித்து, மக்களை மகிழ்விப்பது தான் தனது முதல் நோக்கம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். மக்களும் சந்தானத்திடம் எதிர்பார்ப்பது இதை தான் என்று நிரூபிக்கும் வகையில், அவரது நகைச்சுவையை ரசித்து கொண்டாடுகிறார்கள்.

 

சந்தானத்தையே சில இடங்களில் ஓரம் கட்டும் அளவுக்கு மாறன் மற்றும் சேசுவின் நகைச்சுவைக் காட்சிகள் திரையரங்கையே அதிர வைக்கிறது. மாறனும், சேசுவும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. அதிலும், சேசுவின் பரதநாட்டியம் சிரிக்க தெரியாதவர்களை கூட குபீர் என்று சிரிக்க வைப்பது உறுதி.

எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ், இட்ஸ் பிரசாந்த், ஜாக்குலின், கல்கி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

தாசில்தார் வேடத்தில் நடித்திருக்கும் தமிழ், தனது வில்லத்தனத்தை நாகரீகமாக கையாண்டு ரசிக்க வைத்தாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னாலும் சிரிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷும், நாயகிக்கான அடையாளங்கள் இன்றி ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவர் சிரிக்க வைக்கவில்லை என்றாலும், அவரை வைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்கள் செய்யும் காமெடி அல்டிமேட்.

ஒளிப்பதிவாளர் தீபக் படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து பின்னணியில் கதை நடந்தாலும், சென்னை வார்த்தைகள் மூலம் பாட்டு போட்டிருக்கும் ஷீன் ரோல்டன் கமர்ஷியல் கதைக்கான இசையை தாராளமாக கொடுத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் டி.சிவனந்தீஸ்வரன் மற்றும் கலை இயக்குநர் ஏ.ராஜேஷ் ஆகியோரது பணி காமெடி படத்தையும் தாண்டி கவனிக்க வைத்திருக்கிறது.

 

கோவிலை வைத்து சம்பாதிப்பது, கடவுள் நம்பிக்கை குறித்து பேசுவது என்று சர்ச்சையான களத்தில் கதை பயணித்தாலும், படம் பார்ப்பவர்கள் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை தங்களை மறந்து சிரிக்கும்படி அனைத்து விசயங்களையும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.

சந்தானம் ஹீரோ என்பதற்காக அவருக்கும் ஹீரோயினுக்குமான காட்சிகளை திணிக்காமல், சந்தானம், மாறன் மற்றும் சேசு கூட்டணியின் காட்சிகளை கதையோடு நகர்த்தி காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் யோகி, படத்தில் இடம்பெறும் சிறிய வேடங்கள் மூலமாக கூட எதாவது ஒரு நகைச்சுவையை வைத்து, அதை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கையாண்டு பாராட்டு பெறுகிறார்.

மொத்தத்தில், சிரிப்பு பயிற்சியில் கூட வராத சிரிப்பை மிக எளிதாக நம் முகத்தில் வர வைக்கிறார் இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

ரேட்டிங் 3.5/5

‘வடக்குப்பட்டி ராமசாமி’.- திரைவிமர்சனம்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.