full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை : வைரமுத்து

“நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக நடைபெற்றது எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இந்தப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 50 பேர்களும் சேர்ந்து படத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களே பாடல்களை வெளியிட்டது புதுமையாக இருந்தது.

மேலும், பாடல்களைக் கேட்ட பொதுமக்களையே மேடையேற்றி அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வைத்தது ஆச்சர்யமான நிகழ்வாக இருந்தது.

படத்தையும், பாடல்களையும் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து பேசிய போது, “தலைப்புப் பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது தமிழ் சினிமாவை. தமிழில் பேர் வைத்தால் தான் வரிச்சலுகை கிட்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு தமிழ் சினிமாவில் தலைப்புகள் தமிழை விட்டு தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு தமிழ் இலக்கியத்தின் தலைப்பை, தனக்கு ஆபரணமாகச் சூடிக்கொண்டு வெளிவரப் போகிற படம் தான் “நெடுநல்வாடை”.

இந்தப் படத்திற்குப் பாட்டெழுதியது எனக்கு ஒரு சுகமான அனுபவம். நெல்லை மாவட்டத்து வட்டார வழக்கில் எழுதுங்கள் என்றும், ஆங்கிலச் சொல்லே கலவாமல் முழுக்க முழுக்க தமிழ்ப்பாட்டு எழுதுங்கள் என்றும் இயக்குனர் செல்வகண்ணன் கேட்டபோது நான் மகிழ்ந்து போனேன்.

ஒரு படத்தில் பாட்டு என்பது, உடலில் தொங்குகிற ஆடையாக இல்லாமல் உடம்பில் ஒட்டியிருக்கும் தோல் மாதிரி இருக்கவேண்டும் என்று நம்புகிறவன் நான். படத்திற்கும் பாட்டுக்கும் இடைவெளியே இருக்கக் கூடாது. படத்தின் அங்கம்தான் பாட்டு. இந்த இலக்கணத்தை “நெடுநல்வாடை”யில் நீங்கள் காண்பீர்கள்.

கிராமத்து வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதையில், இன்னும் அறுந்து போகாத தமிழ்க் கலாச்சாரத்தின் பழைய வேர்களைத் துப்பறிந்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன்.

நன் உறவுகள் புனிதமானவை. நம் உறவுகள் ஆழமானவை. அந்த உறவின் பெருமையை, மகள் வழிப்பேரனை ஒரு தாத்தா எப்படியெல்லாம் நேசிக்கிறார் என்ற அடிப்படைப் பண்பாட்டை “நெடுநல்வாடை”யில் செல்வகண்ணன் விவரித்துக் கொண்டே போகிறார்.

இந்தப் படம் தமிழர்களின் உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், உச்சத்தையும் சொல்லும் படமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு கிழவன் செய்கிற தியாகம் தான் “நெடுநல்வாடை”யின் மொத்தக்கரு. தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை. தியாகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட “நெடுநல்வாடை”யும் வெல்லும். செல்வகண்ணன் பேர் சொல்லும்.” என்றார்.