full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வல்லவன் வகுத்ததடா’ – திரைவிமர்சனம்

வல்லவன் வகுத்ததடா’ – திரைவிமர்சனம்

“நல்லது செய்தால் நல்லது நடக்கும்” என்ற விசயத்தை கருவாக வைத்துக்கொண்டு, 6 கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதையை ஹைபர் லிங்க் பாணியில் சொல்வது தான் ‘வல்லவன் வகுத்ததடா’.

என்ன செய்தாலும் பரவாயில்லை, எப்படிப்பட்ட தவறுகள் செய்தாலும் பராவயில்லை பணம் தான் முக்கியம் என்று பயணிக்கும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்ததோடு, மேலும் மேலும் துன்பப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. அதனால் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை, விறுவிறுப்பாக மட்டும் இன்றி, படம் பார்ப்பவர்களின் முழு கவனத்தையும் இரண்டு மணிநேரத்திற்கு ஆட்கொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் துரை.

தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், முதல் முறையாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் தனி மேனரிசத்தோடு நடித்து அதிகம் கவனம்.

எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும் விநாயக் துரை, பிரமாண்டமான முறையில் சொல்லக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதை சிறு பட்ஜெட்டில் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.

 

”நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக் துரை, அமைத்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் அதை ஹைபர் லிங்க் முறையில் சொன்ன விதம் படத்தை ரசிக்க வைக்கிறது.

அதே சமயம், சில காட்சிகள் யூகிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக பணத்திற்காக கஷ்ட்டப்படும் நாயகிக்கு பணம் எந்த வகையில் கிடைக்கும், என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இதுபோன்ற சில சிறு குறைகள் இருந்தாலும், முழு படமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கும் இயக்குநர் விநாயக் துரை, எளிமையான ஒரு விசயத்தை திரை மொழியில் சுவாரஸ்யமாக கொடுப்பதில் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘வல்லவன் வகுத்ததடா’ ”வாவ்..!”

 

ரேட்டிங் 3.5/5

‘வல்லவன் வகுத்ததடா’ – திரைவிமர்சனம்