பணக்கார பெண்ணான கதாநாயகி சாயிஷா, தன்னுடைய தந்தை இறப்பிற்கு பின் தந்தையின் நண்பரான பிரகாஷ் ராஜ் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஒருமுறை அந்தமான் தீவிற்கு தன் நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார் சாயிஷா.
சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் காட்டுவாசியான கதாநாயகன் ஜெயம் ரவி சிக்குகிறார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட, அங்கு ஜெயம் ரவி செய்த அட்டகாசத்தால் மருத்துவமனை நிர்வாகம் கதாநாயகியின் வீட்டிற்கே ஜெயம் ரவியை கொண்டு வந்து விட்டுவிடுகிறது.
ஜெயம் ரவியை தன்னுடையே அரவணைத்துக் கொள்ளும் சாயிஷா, அவருக்கு பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள் உள்ளிட்டவைகளை மாற்ற முயற்சி செய்து பழகி வருகிறார்கள். இந்நிலையில், சாயிஷா வீட்டில் நடக்கும் பார்ட்டியின் போது நடக்கும் பிரச்சனையில், ஜெயம் ரவி கைது செய்யப்பட்டு அந்தமான் அழைத்துச் செல்லபடுகிறார்.
ஜெயம் ரவியை போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் சாயிஷா, காட்டுக்குள் அழைத்துச் சென்று ஜெயம் ரவியின் உறவுகளோடு சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார்.
இறுதியில் ஜெயம் ரவியை தன் உறவுகளோடு சாயிஷா சேர்த்து வைத்தாரா? ஜெயம் ரவியின் உறவுகளுக்கு என்ன ஆனது? கதாநாயகனும் கதாநாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி வெற்றிக்காக கடுமையாக உழைக்க கூடியவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தன்னுடைய கதாப்பாத்திரத்திக்கு என்ன தேவையோ அத்தனையும் முழு உழைப்புடன் கொடுத்துள்ளார். பேசுக்குவதற்கு வசனங்களே இல்லை. இருந்தாலும் முகபாவனையிலேயே தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தியுள்ளார்.
கதாநாயகி நடித்திருக்கும் சாயிஷா, நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நடிப்பு, செண்டிமெண்ட், நடனம் என அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். நிச்சயமாக தமிழ் சினிமா உலகில் பெரிய எதிர்காலம் உண்டு நம்பலாம்.
தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ், வருண் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரத்தை மிக சரியாக செய்துமுடித்துள்ளனர்.
வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்டு வரும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். உலகத்தில் உள்ள காடுகள், காட்டுவாசிகள் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இனிமேலும் அவர்கள் அழியக்கூடாது என்பதை மையக்கருத்தாக வைத்து படமாக இயக்கியிருக்கிறார். திரைக்கதை வலுவாக இருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றுகிறது. லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். ஒரு சில இடங்களில் அடுத்தது இந்த காட்சிதான் வரும் என்று யூகிக்கும் அளவிற்கு உள்ளது.
திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். படத்தின் கதைக்களத்திற்குகேற்ப படம் முழுக்க பச்சை பசேலென்று திரையில் காட்டி நம்மை அசத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் நுட்பமான சில காட்சியமைப்பை கையாண்டுள்ளார்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இது அவருக்கு 50 ஆவது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு, பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். படத்திற்கு ஏற்றார் போல் பின்னணி இசையும் பிரமாதமாக அமைக்கப்பட்டுள்ளது. புலி மற்றும் பறவைகளின் சத்தத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
சினிமாவின் பார்வையில் ‘வனமகன்’ சிறந்த மகன்.