சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்க லைகை புரொடக்ஷன் தயாரிக்க உருவாகி இன்று வெளிவந்துள்ளது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.
நாசரின் சம்மதம் இல்லாமல் பிரபுவை ரம்யா கிருஷ்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால், ரம்யா கிருஷ்ணனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் நாசர். லட்சம் கோடி சொத்து இருந்தும் தனது மகள் ரம்யா கிருஷ்ணன் தன்னை விட்டு பிரிந்து இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறார் நாசர்.
பல வருடங்களுக்கு பிறகு, தனது மகன் வழி பேரனான சிம்புவிடம் ”உன் அத்தையை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. போய் அழைத்து வா” என்று கூறுகிறார் நாசர்.
அத்தை ரம்யா கிருஷ்ணனை அழைத்துச் செல்ல சென்னை வருகிறார் சிம்பு. தன்னையும் பிரபுவையும் தனது தந்தை அவமானப்படுத்தியதால் நாசர் மீது தொடர்ந்து கோபம் குறையாமல் இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
இறுதியாக சிம்பு, ரம்யா கிருஷ்ணனின் மனதை மாற்றி குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
தனக்கான மாஸ் டயலாக், ஆக்ஷன், காமெடி, காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் சிம்பு. சிம்பு ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடும் படியாக தான் படம் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் சிம்பு ‘வந்தா ராஜா போலதான் வந்திருக்காரு.
கிளாமருக்கு குறைவில்லாமல், சுந்தர் சி படத்திற்கு ஏற்ற வெளித்தன்மையோடு நடித்திருக்கின்றனர் ஹீரோயின்களாக வரும் மேகா ஆகாஷ் மற்றும் கேத்ரின் தெரசா.
வழக்கம் போல், நாசர், பிரபு, ரம்யா கிருஷ்ணன், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர், யோகி பாபு, மஹத் ஆகியோர் படத்தில் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
படத்தின் இரண்டாம் பாதியில் யோகி பாபு எண்ட்ரீ ஆவதால், கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். முதல் பாதியில் ரோபோ ஷங்கரின் காமெடி ஓகே ரேன்ஞ் தான். வழக்கமான சுந்தர் சி படத்தில் இடம் பெறும் காமெடி இப்படத்தில் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம் தான்.
அது மட்டுமல்லாமல், கார் வானத்தில் பறப்பது, சிம்பு அடித்தால் 4 பேர் ஆகாயத்தில் மிதப்பது என காரமான சண்டைக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பின்னனி இசை ஓகே ரகம் தான். வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற பாடலை தவிர மற்ற பாடல்கள் அதே ஓகே ரகம் தான். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு கலர்புல்.
சுந்தர் சி படைப்பில் வழக்கமான ஒரு டிபன் சாப்பாடு தான் என்றாலும் கொஞ்சம் சுவையாக தான் இருக்குது.