full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

இது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்!!

காஷ்மீரில், கோயிலுக்குள் வைத்து பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட 8 வயதேயான சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், நடிகைகள் மற்றும் நடிகர்களும் தங்களின் கண்டனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அது சம்பந்தமாக நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கனவே காலம் கடந்துவிட்டது.

அரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா? நான் உங்களை இரந்துக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள், நியாயமான, நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து எதாவது செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, காவிரி, ஏன் ஒரு கண் சிமிட்டலை டிரெண்டிங் ஆக்க முடிந்தது நம்மால்…

ஒரு குழந்தையின், ஒரு உயிரின், மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா?!? நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம். கற்பழிப்புக்கு, கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்ற போராடுவோம். இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி இரந்து அழைக்கிறேன், இதுவே சரியான நேரம். நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுங்கள், எதிர்த்து நில்லுங்கள். கற்பழிப்பு என்பது நாம் சகித்துகொண்டுச் செல்லும் ஒரு விஷயமில்லை.

நாம் அனைவரும் இது நம் பிரச்சனை இல்லை என்று நினைத்தால், அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரியுமா இது மாதிரி ஒரு சம்பவம் தங்களுக்கு நேரும் என்று? ஆனால், அது நடந்தது. இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். இந்த ஆத்திரத்தையும் வலியையும் புரிந்து கொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிததன்மையுடையவராக இருந்தாலே போதுமானது. நாம் ஏற்கனவே மிகவும் காலம் தாழ்த்திவிட்டோம்.

இதனை எதிர்ப்பதற்கும், உங்கள் மனசாட்சி உறுத்துவதற்கும் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும்? நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட அழைக்கவில்லை, ஆனால் சமூக வலைதளங்களின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள். கோழைகளாக இருக்காதீர்கள். உங்களை இரைஞ்சுகிறேன்.

கடுமையான தண்டனை பற்றிய பயம் இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்குமுன்னே ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம். என்னை டிவிட்டரில் பின்தொடரும் எட்டு லட்சம் பேருக்கும் இத்தகவலை நான் பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன். இது அமைதி காக்கும் நேரமல்ல. கற்பழிப்புக்கு மரணதண்டனை கொடு.. எங்களுக்கு நீதி வேண்டும் என போராடும் நேரமிது.

நான் வரலக்ஷ்மி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை, கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ, அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்க கூடாது. அதற்கு மரணதண்டனை ஒன்றே ஒரே தீர்வு” என ஆவேசமாக கூறியிருக்கிறார்.