மலேசிய கேங்க்-களின் கருப்பு பக்கங்களைச் சொல்லும் “வெடிகுண்டு பசங்க”!!

News
0
(0)

சமீப காலமாக சென்னையில் அதிகரித்து வரும் செயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே பாலு, “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”. முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தில் வழிப்பறிக் கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

விமலா பெருமாள் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார் (தேவா), நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி (வித்யா) நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

டோரா, குலேபகாவலி படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி சிதம்பரம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் விமலா பெருமாள் கூறும் போது, “நாயகன் தேவா தன் நண்பர்களுடன் மாமா நடத்தும் இசைக்குழுவில் வேலை செய்து வருகிறான். தன் காதலி வித்யாவின் ஆசையை நிறைவேற்ற அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று வேறொரு இடத்தில் வேலைக்கு சேர்கிறான்.

ஆனால், அந்தக் கும்பல் தான் நகரத்தில் நடக்கிற பல முக்கியமான திருட்டுச் சம்பவங்களை செய்திருக்கிறது என்ற மறுபக்கத்தை அறியாமலேயே அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறான். ஒருகட்டத்தில் அந்தக் கும்பலைப் பற்றி தேவாவின் தந்தை ஆசிர்வாதம் எடுத்துக்கூறியும் நம்ப மறுக்கிறான்.

அதே நேரத்தில் தேவாவின் முதலாளியை கைது செய்வதற்காக காவல்துறை தனிப்படை அமைக்கிறது. இது எதையுமே அறியாத தேவாவை, போகப்போக தனது தவறான காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறான் அந்த முதலாளி.

வித்யாவின் பிறந்தநாள் அன்று, தேவாவிற்கு ஒரு முக்கியமான வேலை ஒப்படைக்கப்படுகிறது. ஆனாலும், எப்படியாவது வித்யாவை சந்தித்து விட வேண்டும் என ஆசைப்படுகிற தேவா, முதலாளியையும் அழைத்துக் கொண்டு போகிறான். அங்கே எதிர்பாராத விதமாக திவ்யாவிற்கு பெரிய அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது. அதற்கு தேவா தான் காரணம் என காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

வித்யாவிற்கு என்ன ஆனது? அவளின் நிலைமைக்கு காரணம் யார்? தேவா முதலாளியை புரிந்து கொண்டானா? தான் குற்றவாளி இல்லை என எப்படி நிரூபித்தான்? போன்ற கேள்விகளுக்கான விடையை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்லி இருக்கிறோம்.” என்றார்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.