full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

வேலைக்காரன் விமர்சனம்!

 

காமெடி இல்லை, கலாட்டா இல்லை, நக்கல் இல்லை, நையாண்டி இல்லை. இன்னும் சொல்லப் போனால் இது சிவ கார்த்திகேயன் படமே இல்லை.
சரி படத்தில் என்ன தான் இருக்கு?, இருக்கு.. நாம் பேச, சிந்திக்க, எடுத்துக்கொள்ள நிறையவே இருக்கு!

மாபெரும் மனிதக் கூட்டத்தால் நிரம்பி வழிகிற இந்த ஒட்டுமொத்த உலகமுமே, யாரோ ஒரு சில ஆயிரம் பேருக்கு மட்டும் ஒரு வளம் மிக்க வியாபார சந்தையாக இருந்து கொண்டே இருக்கிறது. அந்த சந்தையை தொய்வில்லாததாக மாற்றிக்கொள்ள அந்த சில ஆயிரம் பேர், அவர்களுக்குக் கீழ் உள்ள சில லட்சம் பேர், அவர்களுக்குக் கீழ் உள்ள சில கோடி பேர் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பு தான் எளிமையாக “கார்ப்பரேட்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த சமூகத்தின் பொதுப்புத்தியில் “கார்ப்பரேட்” என்றால் என்னவோ, தனி ஒரு முதலாளி மட்டும் தான் என்று பதிந்திருக்கிறது. அப்படியில்லை, கார்ப்பரேட் என்பது முதலாளிகள் எல்லாம் ஒன்று கூடி உருவாக்கி வைத்திருக்கிற ஒரு கட்டமைப்பு. அது தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளுமே தவிர, ஒரு போதும் ஒன்றையொன்று காட்டிக் கொடுக்காது. எல்லா கார்ப்பரேட்டுகளின் பொதுவான எண்ணமுமே, எக்காரணத்தை முன்னிட்டும் தங்கள் நுகர்வோர் விழிப்படைந்து விடக் கூடாது என்பது தான்.

அதற்காகத் தான் மக்களின் தேவை என்ன என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இன்று கார்ப்பரேட்டுகள் அமர்ந்திருக்கின்றன. தான் தருவதைத் தான் என் நுகர்வோர் பயன்படுத்தியாக வேண்டும், என்கிற அடாவடித்தனம் ஒவ்வொரு பெரு முதலாளியிடமும் இருக்கிறது. அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி. அதற்காகத் தான் அத்தனை விளம்பரங்களும், அதற்கான செலவுகளும். நம் வீட்டின் குளியலறையை உடைத்துக் கொண்டு வந்து, நீ என் “டூத் பேஸ்டைத்” தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுமளவிற்கு வந்திருக்கிறது.

பொதுவாகவே இங்கே சந்தைப் படுத்தப்படும் பொருட்கள் எல்லாமே, நுகர்வோரை அச்சமூட்டி தான் விற்கப்படுகின்றன. நீ என் சோப்பை போடலன்னா ஸ்கின் அலர்ஜி வந்திடும்..
நீ என் டூத் பேஸ்ட் தேய்க்கலன்னா பல் சொத்தையாயிடும்.. நீ என் சிமெண்ட் கலக்கலேன்னா கட்டிடம் இடிஞ்சிடும்.. இவ்வளவு ஏன்? நீ என் காண்டம் போடலேன்னா, உன்னால செய்யவே முடியாது..
இவைதான் இங்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜியாக இருக்கிறது.

இப்படி மக்களின் அத்தனை அத்தியாவசிய தேவைகளையும் கார்ப்பரேட்டுகள் கையில் எடுத்துக் கொண்டு, அவற்றையெல்லாம் அச்சமூட்டி, அச்சமூட்டியே மக்களிடம் வியாபாரம் செய்து வருகின்றன.

அப்படிப்பட்ட ஒரு கார்ப்பரேட்டில் வேலைக்காரனாக இருக்கும் ஒரு இளைஞன், மக்கள் தங்களால் முட்டாளாக்கப்படுவதை உணர்ந்து அந்த கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராகவே போராடி ஜெயிப்பது தான் “வேலைக்காரன்” படத்தின் கதை.

இந்தக் கதைக்காக மோகன் ராஜா எடுத்துக் கொண்டுள்ள சிரத்தை, தான் சொல்ல வந்ததை சரியாக பதிவு செய்துவிட வேண்டும் என்கிற அவரது மெனக்கெடல் நிஜமாகவே பாராட்டிற்குரியது.
அதிலும் மார்க்கெட்டிங் பற்றி அவர் தரும் விளக்கம் அவ்வளவும் உண்மை.

சிவகார்த்திகேயன் தனது எல்லையை விட்டு, வெகு தூரம் பயணிக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெருகிறார். அப்படியொரு தெளிவான நடிப்பு! ஆனால் இதை அவரிடமிருந்து எதிர்பார்க்காத ரசிகர்கள் கொஞ்சம் சிரமப் பட்டு அவரை ஏற்றுக்கொள்வார்கள். ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்று நினைத்த இயக்குநரிடம், தன்னை முழுமையாக தந்துவிட்டு தன் பழைய முகத்தை மறைத்துக் கொண்ட வகையில் மிளிர்கிறார் சிவா. சிறப்பு.

அம்மாடியோவ், ஃபகத் ஃபாசில். அந்த சிரிப்பு போதும். பார்த்துட்டே இருக்கலாம் போல. கடைசி வரை சட்டை கசங்காம, கத்தி பேசாம… சூப்பர் ப்ரோ.. வெல்கம் டூ தமிழ் சினிமா.

என்னாச்சு நயன்தாராவுக்கு? கண்ணு பட்டுடுச்சு போல. பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், மூனீஸ்காந்த் என ஒரு பட்டாளமே இருக்கிறது படத்திற்குள். ஆனாலும் சார்லி மற்றும் ரோஹினி இருவரும் நெஞ்சில் நிற்கிறார்கள்.

“கருத்தவன்லாம் கலீஜாம்” பாடல் தவிர, அனிருத் தான் இசை என்பதை நம்ப முடியவில்லை. பின்னணி இசையில் சொல்லும்படி ஸ்பெஷல் எதுவும் இல்லை.

மோகன் ராஜா மிகத் தைரியமாக ஒட்டுமோத்த கார்ப்பரேட்டுகளின் மீதும் குற்றம் சுமத்தியிருக்கிறார். அந்த குற்றச்சாட்டு உண்மையும் கூட. காரணம்,

அவர்கள் தான் ஊழலின் ஊற்றுக் கண். அவர்கள் தான் விதியை மீறவேண்டும், தளர்த்த வேண்டும், குறுக்குவழியை நாட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்… இந்தியாவில் மிக மோசமாக ஊழல் மலிந்துகிடக்கிறது. கையூட்டு பெறும் குற்றவாளிகளை தண்டிக்கும் இந்த தேசம், கையூட்டு கொடுப்பவனை மட்டும் வாணிபம் செய்யும் புத்திசாலியாக பார்க்கும் வரை இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்க்கும் இந்த நாடு தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும். தேர்தலில் செலவிடும் பணத்தை கார்பரேட்டுகளிடமிருந்து பெற்றுக் கொண்டு… மக்களை அரசியல் அறியாமையில் மூழ்கடித்து குட்டிச்சுவராக்கும் “இந்திய முதலாளி வர்க்கத்திற்கு” எந்த நேர்மையும் இல்லை. மொத்தத்தில் இந்த தேசம்… ஒரு கூட்டுக் கொள்ளை நிறுவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. இது தான் ராஜா சொல்ல நினைத்திருப்பது.

ஆனால் இவ்வளவு மெனக்கெட்டு படம் எடுத்த ராஜா, கூலிப்படையெல்லாம் குப்பத்துல தான் இருக்கும்,  என்கிற மலினமான தமிழ் சினிமாவின் அடிமட்ட சிந்தனையை இந்தப் படத்திற்குள் தினித்திருப்பதை ஏற்க முடியவில்லை. குப்பத்திலிருப்பவர்கள் எல்லாருமே அடியாட்களாகத்தான் இருப்பார்கள் என்று காட்டுவதற்காகவா முத்துராஜ் அப்படி ஒரு பிரமாதமான செட் போட்டுக் கொடுத்தார் உங்களுக்கு? அதிலும் இன்னொன்று சொன்னீர்களே, “உனக்கு அடியாள் வேலை கொடுக்கலேன்னா, நீ எங்கயாச்சும் சாக்கடை அள்ளிட்ருப்ப, கக்கூஸ் கழுவிட்ருப்ப” அப்படின்னு.. போதும் சார், அடுத்த படத்துல குப்பத்தை பத்தி எதாச்சும் எடுக்கணும்னா, அவங்களோட வாழ்ந்து பார்த்திட்டு பதிவு பண்ணுங்க ப்ளீஸ்..

மற்றபடி ”வேலைக்காரன்” நிமிர்ந்தே நிற்கிறான்!