24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயனின் அப்பா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை ஆர் டி ராஜா செய்து வருகிறார். ஒரு பிரமாண்ட படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் சாப்பிடுவது சாதாரண சுந்தரி அக்கா கடையில் தான். உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் தங்கக் காசு கொடுத்த இந்த உள்ளத்துக்கு நன்றி. மொழிமாற்று படம் தான் எடுப்பார் ராஜா என பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தனி ஒருவன் என்ற படத்தை கொடுத்து மிரட்டியவர் ராஜா. ராஜாவும், ராஜாவும் சேர்ந்து மக்கள் செல்வனாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு உன்னத படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றார் பாடலாசிரியர் அறிவுமதி.
படத்தின் முதல் வேலைக்காரன் இயக்குனர் ராஜா, அவன் மீது நம்பிக்கை வைத்த இரண்டாவது வேலைக்காரன் சிவகார்த்திகேயன், சகல வசதிகளையும் செய்து கொடுத்த மூன்றாவது வேலைக்காரன் தயாரிப்பாளர் ராஜா. எந்த பாடலை கேட்டாலும் லயிக்க வைக்கும் திறமை பெற்ற அனிருத் சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார். தனி ஒருவன் படத்தின் மூலம் அத்தனையையும் அடித்து நொறுக்கிய ராஜா, ஒரு வருடம் தூங்காமல் உழைத்திருக்கும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்துக்கு தூக்கி செல்லும் படமாக இது நிச்சயம் இருக்கும் என்றார் எடிட்டர் மோகன்.
வேலைக்காரர்களை கொண்டாடும் ஒரு படத்தில் நானும் ஒரு வேலைக்காரனாக இருப்பதில் பெருமை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை சாதாரண தோல்கள் தாங்குவது இயலாத காரியம், அதை தாங்கும் ஒரு ரோபோ தான் அனிருத். எல்லா பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்குவது அவரின் அவரின் அசாத்திய உழைப்பு என்றார் பாடலாசிரியர் விவேக்.
இது ஒரு சாதாரண படமாக மட்டுமல்லாமல் சாதனை படமாக இருக்கும். உழைப்பாளர்களின் பெருமையை சொல்லும் படமாக இது நிச்சயம் இருக்கும் என்றார் பாடலாசிரியர் விவேகா.
உழைக்கும் வர்க்கத்தை பற்றிய ஒரு படம் தான் இந்த வேலைக்காரன். படத்தின் கதையை முழுக்க சொல்லாமல் தேவையான சில சிச்சுவேஷன்ஸ் மட்டும் சொன்னார் இயக்குனர். அவை அனைத்தும் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக இருந்தன. ஒவ்வொரு படியாக இல்லாமல் ஒவ்வொரு சிகரமாக தாண்டி தாண்டி போய்க் கொண்டிருக்கிறார்கள் அனிருத்தும், சிவகார்த்திகேயனும். தூக்கத்தை தொலைத்து எல்லா படங்களிலும் எல்லா பாடல்களையும் சிறப்பாக கொடுத்து வருகிறார் அனிருத். என் மகன் உட்பட பெரும்பாலான குழந்தைகள் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் என்றார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.
வேலைக்காரன் என்னுடைய 15வது படம். இதுவரை நிறைய ஜானர்களில் படங்கள் செய்திருக்கிறேன். ராஜாவிடம் இந்த படத்தின் கதையை முதலில் கேட்டவுடனே நல்ல மனிதனாக உணர்ந்தேன். தயாரிப்பாளர் ராஜா என்னுடைய கேரியரிலும் எனக்கு பக்க பலமாக இருக்கிறார். இந்த படத்தில் இதுவரை பார்க்காத பல புது விஷயங்களை பார்ப்பீர்கள். கருத்தவன்லாம் கலீஜாம் பாடலுக்கு இங்கு ரசிகர்கள் ஆடுவதை பார்க்கும் போதே தியேட்டர் எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. பாடல்களின் வெற்றியில் பாதி பங்கு பாடல் எழுதிய பாடலாசிரியர்களுக்கும் இருக்கிறது. சிவாவுடன் எனக்கு இது ஐந்தாவது படம். படங்களை தாண்டியும் எங்கள் நட்பு எப்போதும் தொடரும் என்றார் இசையமைப்பாளர் அனிருத்.
எனக்கு எந்த பாராட்டு கிடைத்தாலும் அப்பா, அம்மாவுக்கு தான் சாரும். இந்த படத்துக்கு எந்த பாராட்டுக்கள் வந்தாலும் அது வேலைக்காரர்களுக்கு தான் போய் சேரும். உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். எங்கள் மொத்த குழுவின் உழைப்புக்கு மரியாதை கொடுத்தது அனிருத்தின் இசை. அவரின் இசை தான் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் ஆயுதம். எங்கு போனாலும் 4,5 வருடம் ஆனாலும் பரவாயில்லை, தனி ஒருவன் மாதிரி படம் பண்ணுங்க என எல்லோரும் சொல்கிறார்கள். அப்படி மீண்டும் ஒரு படம் பண்ண எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் தயாரிப்பாளர் ராஜா. அவர் கொடுத்த தைரியம் தான் இந்த வேலைக்காரன். நான் இயக்கிய நடிகர்களில் சிவகார்த்திகேயனுடன் வேலை செய்வது மிகவும் சௌகரியமாக இருந்தது. கூடிய விரைவில் இன்னுமொரு படத்திலும் இணைவோம். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாதுனு சொல்றாங்க. அரசியலுக்கு வர சினிமாகாரனுக்கு தான் எல்லா தகுதியும் உண்டு. மக்கள் உணர்வுகளை அதிகம் புரிந்தவர்கள் கலைஞர்கள் தான் என்றார் இயக்குனர் மோகன் ராஜா.
தனி ஒருவன் ரிலீஸுக்கு பிறகு படத்தை இரண்டு முறை பார்த்து, மோகன் ராஜா சாரிடம் போனில் அழைத்து படத்தை பற்றி சிலாகித்து பேசினேன். அவரோடு ஒரு படம் பண்ணனும்னு நானே அவரிடம் தயக்கத்தை விட்டு கேட்டேன். இதுவரை அவர் ரீமேக் படம் தான் பன்ணாருனு கிண்டல் பண்றாங்க. ரீமேக் படம் பண்றது சாதாரண விஷயம் அல்ல. எனக்கும் கூட பத்து ரீமேக் பட வாய்ப்புகள் வந்தன, ரொம்ப கஷ்டம் என்பதால் அதை மறுத்து விட்டேன்.
வேலைக்காரன் தலைவர் டைட்டில். அதை வைப்பதா? என முதலில் யோசித்தேன். படத்துக்கு பொருத்தமான தலைப்புனு ராஜா சார் சொன்னதால் வைத்தோம். அதை படம் பார்த்தால் உணர்வீர்கள். வேலைக்காரன் தலைப்பை கவிதாலயாவிடம் இருந்து வாங்கி தன் படத்துக்கு வைத்திருந்தார் விஜய் வசந்த். இந்த படத்துக்கு கேட்டதும் பெருந்தன்மையோடு கொடுத்தார். ஃபகத் பாஸில் இந்த படத்தில் நடித்தது எங்களுக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம். அவர் ஒரு சர்வதேச நடிகர். அவரின் நடிப்பை பக்கத்தில் இருந்து பார்த்து, ரசித்து, பயந்து நடித்ததால் தான் நானும் ஓரளவுக்கு நடிக்க முடிந்தது.
ஏகன் பட ஷூட்டிங்கில் தான் முதன் முதலில் நயன்தாராவை நான் பார்த்தேன். அதன் பிறகு எதிர்நீச்சல் படத்துக்கு சம்பளம் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். அதன் பிறகு வேலைக்காரன் ஷூட்டிங்கில் தான் அவரை சந்தித்தேன். அவரின் தன்னம்பிக்கை தான் அவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது. இந்த படத்துக்கு கேரவன் கிடையாது, ஒன்றாக அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசுவோம். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ராம்ஜி மிகவும் கஷ்டமான படங்களையே தேர்ந்தெடுத்து தான் செய்பவர். முத்துராஜ் சாரின் உழைப்பை படம் பார்க்கும்போது நீங்கள் உணர்வீர்கள்.
அனிருத் இல்லைன்னா சிவகார்த்திகேயன் இல்லைனு ட்விட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மை, அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறீங்க, அதை எப்படி திருப்பி கொடுப்பேன்னு தெரியல. ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு இந்த வேலைக்காரன். நான் விளம்பரங்களில் நடிப்பதில்லை, இந்த படத்தில் நடித்த பிறகு விளம்பரங்களில் இனி நடிக்கவே மாட்டேன் என முடிவெடுத்திருக்கிறேன். 9 படம் பொழுதுபோக்குக்கு நடித்தால், ஒரு படம் மக்களுக்கு அறிவை புகட்டும் படமாக இருக்கும். முழுக்க கதையை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம் என்றார் நாயகன் சிவகார்த்திகேயன்.
நடிகர்கள் ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர் ஜே பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, தயாரிப்பாளர் ஆர் டி ராஜா ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.
7 வேலைக்காரர்களை தேர்வு செய்து அவர்களை மேடைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் வேலைக்காரன் படத்தின் இசை வெளியிடப்பட்டது. முன்னதாக அனிருத்தின் லைவ் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நவீன் மிமிக்ரி, ராஜ்மோகன் பேச்சு, லேசர் ஒளி அலங்காரம் என விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விஜய் டிவி திவ்யதர்ஷினி மற்றும் ஆர் ஜே விக்னேஷ் விழாவை தொகுத்து வழங்கினர்.