ஆர்.கே.நகரைத் தயாரிக்கிறார் வெங்கட்பிரபு

News

தமிழகத்தில் சமீபத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட தொகுதி ஆர்.கே.நகர். இந்த தொகுதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாகும். அவருடைய மறைவுக்கு பிறகு இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா அதிகமாக இருந்ததால் இந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதி இந்திய அளவில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த தொகுதியின் பெயரை தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் வெங்கட் பிரபு. ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, தன்னுடைய தயாரிப்பில் இரண்டாவது படமாக வைபவ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க முன்வந்தார்.

இந்த படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கப்படாமலே இருந்து வந்தது. தற்போது இப்படத்திற்கு ‘ஆர்.கே.நகர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்குகிறார். வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கவிருக்கிறார். வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். எடிட்டிங் பிரவீன் கே.எல்., ஆர்ட் டைரக்டராக விதேஷ், காஸ்ட்யூம் டிசைனராக வாசுகி பாஸ்கர் ஆகியோரும் பணியாற்றவிருக்கிறார்கள்.