தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு பதில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
துணை ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இவரது பெயரை பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூடி தேர்வு செய்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும். மகாத்மா காந்தி- மூதறிஞர் ராஜாஜி ஆகியோரின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.
இதன்மூலம் துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு காலை 11.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர் உடன் இருந்தனர். அதிமுக எம்.பி. மைத்ரேயனும் வேட்பு மனு தாக்கலின் போது இருந்தார்.
மேல்-சபையில் அகாலிதளம், தெலுங்கு தேசம், சிவசேனா போன்ற கூட்டணி கட்சிகள் தவிர அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரிப்பதால் வெங்கையா நாயுடுக்கு 557 எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கும் என்பதால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.