துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது. இதில் பா.ஜனதா வேட்பாளரான வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தொடர்ந்து 2-வது முறையாக துணை ஜனாதிபதி பதவியை வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் 10-ந் தேதி முடிவுக்கு வருகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.
இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரியான வெங்கையா நாயுடு நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க உள்ளதால், இதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பின்னர் மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 7 மணியளவில் முடிவு அறிவிக்கப்படும். தேர்தலில் பதிவாகும் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் பாதிக்கு மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
பாராளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 790 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பாராளுமன்றத்தில் 2 இடங்களும், மேல்-சபையில் ஒன்றுமாக தற்போது 3 காலியிடங்கள் உள்ளன.
மேலும் பா.ஜனதாவைச் சேர்ந்த சேத்தி பஸ்வான் எம்.பி.க்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவர் வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
தற்போதைய நிலையில் 545 உறுப்பினர் கொண்ட பாராளுமன்றத்தில் பா.ஜனதாவின் 281 உறுப்பினர்கள் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 338 உறுப்பினர்கள் உள்ளனர். மேல்-சபையில் பா.ஜனதா 56 உறுப்பினர்களை கொண்டுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சிகளும் கணிசமான இடங்களைக் கொண்டுள்ளன.
இதன் மூலம் வெங்கையா நாயுடுவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவியையும் பா.ஜனதாவே அலங்கரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை ஆதரித்த பிஜு ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் துணை ஜனாதிபதி தேர்தலில் கோபால கிருஷ்ண காந்தியை ஆதரிக்கின்றன. எனினும் இது பா.ஜனதாவின் வெற்றி வாய்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.