நம் வாழ்வில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், அவற்றை மதியால் எப்படி வெல்லலாம் என்பதே “விதி மதி உல்டா” படம்.
அறிமுக இயக்குநர் விஜய் பாலாஜி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராம். அந்த புத்திசாலித்தனமும், காட்சிகளை விவரிக்கிற விதமும் குருவுக்கு தப்பாத சிஷ்யன் என்பதை நிரூபித்திருக்கிறார். கையாள்வதற்கு கடினமான
திரைக்கதையை கவனமாக கையாண்டு கடைசி வரை படத்தை கொண்டு போயிருக்கிறார். ஆனால்?
எல்லாவற்றையும் காமெடியாகவே சொல்லி, படத்தின் சீரியஸ் தன்மையை குறைத்தது ஏனோ இயக்குநரே?
ரமீஸ் ராஜா.. கொழுகொழுவென்று அழகாக இருக்கிறார். ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமாகும் போது ஸ்ரீகாந்த் பேசிய மாடுலேஷன் போல் கொஞ்சலாக இருக்கிறது ரமீஸின் பேச்சு. ரசிக்கலாம்!
ஆனால் அந்த பாடி லாங்குவேஜ்? ஃபேஸ் எக்ஸ்பிரெஸன்? இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும் ப்ரோ!
ஹீரோயின் ஜனனி, வழக்கமான தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகியாக நம்மைக் கடந்து போய்விடுகிறார். பாடல் காட்சிகளில் மட்டும் அம்புட்டு அழகு!
டேனியல் பாலாஜி, வில்லனா? இல்லை காமெடியனா? என்றே தெரியவில்லை. முறைத்துக் கொண்டே விறைப்பாக அவர் பேசும் போதெல்லாம் நமக்கு சிரிப்பு மட்டுமே வருகிறது. ஒருவேளை இதுதான் அவர்கள் எதிர்பார்த்ததோ என்னவோ?
கருணாகரன் கூட்டத்தில் ஒருவராக வருகிறார், போகிறார். என்னாச்சு தல?
படத்தின் ஜீவனே செண்ட்ராயன் அண்கோ மற்றும் லோகேஷ் அண்கோ தான். சொதப்பல் பிளான்களால் தியேட்டரை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார்கள். அதிலும் “ஆதித்யா”கதிர் பிரிச்செடுக்கிறார். அப்படியே கும்பலாவே இன்னும் நிறைய படத்தில் காமேடி பண்ணுங்கப்பா..
இறுதியாக இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தி. பையனுக்கு முதல் படமாம். சும்மா தட்டித் தூக்கியிருக்காப்ள. “தாறு மாறா”, “உன் நெருக்கம்” இரண்டு பாடல்களுமே இளைஞர்களுக்கான பீட். அதிலும்
“உன் நெருக்கம்” லவ்லி ப்ரோ. இன்னொரு அனிருத் ஆன் த வே!
முதல் பாதியில் வந்த காட்சிகள், பிற்பாதியிலும் வருவது மாதிரியான திரைக்கதை என்பதால் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே படம் நகர்வதால் காரணங்கள் அடிபடுகின்றன.
மொத்ததில் குடும்பத்துடம் மகிழ்ந்து திரும்புவதற்கான அத்தனையும் “விதி மதி உல்டா” படத்தில் இருக்கிறது.