full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வித்யாசாகர் ராவ் அப்போலோ நிகழ்வுகள் பற்றி எழுதிய புத்தகம்

தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி காலம் முடிந்ததையடுத்து தமிழக பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றினார். அவர், 398 நாட்கள் தமிழக கவர்னர் பணியில் இருந்தார்.

அவர் பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா மரணம், அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள், நம்பிக்கை இல்லா தீர்மானம் என பல பிரச்சினைகள் வந்தன.

இந்த வி‌ஷயங்களை குறிப்பிட்டு வித்யாசாகர்ராவ் 148 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘தோஸ் ஈவன்ட்புள் டேய்ஸ்’ (அந்த நாளில் நடந்த நிகழ்வுகள்) என்ற அந்த புத்தகத்தில், அவர் தமிழகத்தில் கவர்னராக இருந்த போது, நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

வித்யாசாகர்ராவ் பதவி ஏற்ற சில நாட்களிலேயே ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் இறுதியாக மரணம் அடைந்தார்.

இதுபற்றி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள வித்யாசாகர்ராவ் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்ந்ததும் அவர் எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில், ஜெயலலிதா விரைவில் குணம் அடைய வேண்டும் என்று நான் எழுதிய கடிதத்துக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு கவர்னர் அக்டோபர் 1-ந்தேதி விடுத்த அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் விரைவாக குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கூறி இருந்தார்.

22-ந் தேதி 2-வது முறையாக ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் பார்த்தார். ஆனால், இந்த வி‌ஷயங்கள் பற்றி எல்லாம் புத்தகத்தில் இடம் பெறவில்லை. குறிப்பாக ஜெயலலிதாவை சிகிச்சை சம்பந்தமான ரகசியங்கள் எதுவுமே புத்தகத்தில் வித்யாசாகர்ராவ் குறிப்பிடவில்லை.

கடந்த காலத்தில் எம்.ஜி.ஆர். உடல்நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, என்ன அரசியல் சூழ்நிலை இருந்ததோ அதே நிலை ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போதும் இருந்தது என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ஜெயலலிதாவுடைய துறைகள் எல்லாம் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது பற்றியும் கூறி இருக்கிறார்.

பின்னர் பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ததால் தனக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதே நேரத்தில் அரசியல் சட்டத்துக்கு பங்கம் ஏற்படாமல் தனது பணியை செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

அடுத்து ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக திரும்பியதையும், சசிகலா முதல்-அமைச்சராக எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ள அவர், சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வர இருந்ததால் அது வரும் வரை காத்து இருந்தேன். இதனால்தான் சசிகலாவை முதல்-அமைச்சராக பதவி ஏற்க அழைக்கவில்லை.

அந்த நேரத்தில் பத்திரிகைகளும், மற்றவர்களும் பல்வேறு விமர்சனங்களை வைத்தனர். ஆனாலும், அமைதியாக இருந்து எந்த சிக்கல்களும் வராதவாறு பார்த்து கொண்டேன்.

உரிய சூழல் வருவதற்காக காத்து இருந்து இதில் நல்ல முடிவு எடுக்கப்பட்டது என்று திருக்குறளை மேற்கோள் காட்டி அவர் புத்தகத்தில் எழுதி உள்ளார்.

அதே நேரத்தில் 19 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவை விலக்கி கொண்டது, தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் தன்னை வந்து சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்ட சபை மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கூறியது.

செப்டம்பர் 7-ந் தேதி தினகரன் கவர்னரை சந்தித்தது போன்ற தகவல்கள் எதுவும் புத்தகத்தில் இடம் பெறவில்லை.

தமிழகத்தில் நடந்த அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியான மனநிலையுடன் இருந்து மக்கள் நலன் காப்பாற்றப்பட்டது என்று கூறி உள்ளார்.

எல்லா வி‌ஷயத்திலும் சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசியும், சட்ட புத்தகங்களை ஆராய்ந்தும் முடிவு எடுத்ததாகவும் அவர் புத்தகத்தில் கூறி உள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம், துணைவேந்தர் தேர்வு போன்றவை உரிய முறையில் தீர்த்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் ஊழல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்காக கவர்னர் மாளிகை எப்போதும் திறந்து இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.