விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான “கொலைகாரன்” திரைப்படம், நல்ல விமர்சனங்களையும், நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள். இதில் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் விஷயம் என்னவென்றால், ‘கொலைகாரன்’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி இந்த பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக நடிக்கிறார். வெகுஜன வர்த்தக கூறுகளை யதார்த்தமான அணுகுமுறை மற்றும் காட்சிகள் மூலம் இணைப்பதில் மிகவும் பிரபலமானவரான ஒளிப்பதிவாளர்-இயக்குநர் விஜய் மில்டன் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குவதோடு, ஒளிப்பதிவும் செய்கிறார்.
தற்போது, இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் 2019 முதல் ‘இந்திய கடற்கரைகளின் தலைநகரமான’ கோவா, டையூ மற்றும் டாமன் ஆகியவற்றின் அழகான இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விஜய் ஆண்டனி, விஜய் மில்டன் மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணையும்போது, இந்த அணியில் இருந்து ஒரு நம்பகமான மற்றும் தரமான படத்தை எதிர்பார்க்கலாம்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.