full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஜய் ஆண்டனியின் ஹீரோயின் டேஸ்ட்!

விஜய் ஆண்டனி, ரொம்ப சிம்பிள் அண்ட் ஸ்வீட் சினிமாக்காரர். எனக்கு இசை தெரியாது, ஆனால் இசையமைப்பாளர் ஆகிட்டேன், எனக்கு நடிக்கத் தெரியாது ஆனா நடிகர் ஆகிட்டேன் என்று வெளிப்படையாக பேசக்கூடிய சினிமாக்காரர். அதைப்போலவே தன் படத்தின் கதைகளை வித்தியாசமானவை என்றோ புதுமையானது என்றோ எப்போதும் அவர் சொல்வதில்லை. ஜனரஞ்சகமான அனைவருக்கும் பிடிக்கிற மாதிரியான குடும்ப செண்டிமெண்ட் மசாலா படங்களில் நடிப்பதில் ரொம்பவே தெளிவாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான அண்ணாதுரையும் அந்த வகைப் படம் தான். அண்ணாதுரை படத்திற்காக விஜய்ஆண்டனியை பாராட்டியே ஆகவேண்டும். தமிழ் சினிமா ஹீரோயின்கள் என்றாலே தெற்கே சென்று மலையாள மங்கைகளையோ, வடக்கே சென்று பம்பாய், கொல்கத்தா, டெல்லி என வட இந்திய நங்கைகளையோ அழைத்து வருவதும் வளர்த்துவிடுவதும் தமிழ் சினிமாவின் நீண்ட நெடுநாள் பழக்கம். அதிலும் கருப்பு கலரோ, தமிழ் சாயலோ இல்லாமல் பார்த்துக்கொள்வதும் ரொம்ப ஸ்லிம்மானவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதும் ஊரறிந்த ஒன்று தான். ஆனால், அந்த வகையில் விஜய் ஆண்டனியின் சமீபத்திய ஹீரோயின் தேர்வு மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று. பாராட்டப்படவேண்டிய ஒன்று.

கொஞ்சம் குண்டான, மாநிறமான பெண்களை தன் சமீபத்திய படங்களின் கதாநாயகிகள் ஆக்கி இருக்கிறார். சலீம் படத்தின் கதாநாயகி அக்‌ஷா, பிச்சைக்காரன் படத்தின் கதாநாயகியான சத்னா டைடஸ், சைத்தான் படத்தின் கதாநாயகியான அருந்ததி நாயர், அண்ணாதுரை படத்தின் கதாநாயகிகளான டயானா சம்பிகா, மகிமா ஆகியோரை குறிப்பிடலாம். அதிலும் அண்ணாதுரை படத்தின் கதாநாயகிகள் இருவரும் ரொம்பவே இயல்பான, யதார்த்தமான பெண்களின் தோற்றத்தில் இருந்தார்கள். அந்த மாதிரி பெண்கள் தான் தனக்கு ஜோடியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூட விஜய் ஆண்டனி நினைக்கலாம். அது அவரது சுயநலமாகவும் இருக்கலாம். ஆனால், இப்படியாக கொஞ்சம் குண்டான மாநிறமான பெண்களை கதாநாயகிகளாக தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனியை பாராட்டவே தோன்றுகிறது. ஏனெனில் கதாநாயகிகளின் தோற்றங்கள் பற்றிய சினிமாக்காரர்களின் கமெண்டுகளும் ரசிகர்களின் கமெண்டுகளும் நாம் அறியாததல்ல. சமீபத்தில் குண்டாக இருப்பது பற்றி நடிகை நித்யா மேனன் குறிப்பிட்டதை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். “நான் குண்டாக குள்ளமாக இருக்கிறேன் என்கிறார்கள். நடிப்பிற்காக சாப்பாட்டை தியாகம் செய்வது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். குள்ளமாக, குண்டாக இருப்பது இயற்கையின் செயல்” என்கிறார், நித்யாமேனன்.

விஜய் ஆண்டனியின் இந்த ஹீரோயின் டேஸ்ட் ஹீரோயின்களுக்கு பிடிக்கிறதோ, நிச்சயமாக சராசரிப் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கலாம்.

ஒரு கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும், தொடர்ந்து தன்னுடைய படங்களில் இப்படியான தோற்றமுள்ள நடிகைகளை கதாநாயகிகளாக தேர்வு செய்கிற விஜய் ஆண்டனி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

– முருகன் மந்திரம்