கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமானவர் விஜய் மல்லையா.
இவர் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைது செய்து அழைத்து வரும் நடவடிக்கையை இந்திய அரசு தீவிரப்படுத்தியிருந்தது.
இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீது இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவைக் கைது செய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவி கோரியிருந்தது இந்திய அரசு. வேண்டுகோளை ஏற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீஸார், அவரைக் கைது செய்தனர். கைதான அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் விஜய் மல்லையா இன்று லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்றும், லண்டன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை தொடர்ந்து, பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.