அட்லி – விஜய் கூட்டணியின் இரண்டாவது படமான “மெர்சல்” திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க கடந்த வருடம் வெளியானது. “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்” நிறுவனத்தின் 100-வது படமான இப்படம் எதிர்பார்த்ததை விட தாறுமாறாக ஹிட் அடித்தது.
அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து உலக அளவில் பல விருதுகளை “மெர்சல்” திரைப்படம் தட்டிச் சென்றது. சமீபத்தில் கூட, சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையையும் “மெர்சல்” பெற்றது.
இந்நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, தற்போது இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் விஜய், கென்னத் ஓகோலி, டைம் ஹசன், ஜோஷுவா ஜேக்ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஐஏஆர்எ, வரும் 22 – ம் தேதி லண்டனில் இவ்விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.