full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வரி விவகாரம்..மேல் முறையீடு செய்கிறார் விஜய்

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவுவரி செலுத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பில், தன் மீதான தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

கடந்த 2012-ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு இறக்குமதி வரியாக ரூ.1,88,11,045 ரூபாயை செலுத்தியிருந்தார் நடிகர் விஜய். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு சென்றபோது, நுழைவு வரியை தமிழ்நாடு வணிக வரித்துறையில் செலுத்தி ஆட்சேபனை இல்லா சான்று வாங்கிவர நடிகர் விஜய்க்கு உத்தரவிடப்பட்டது.ஆனால் கேரளா மற்றும் தமிழ்நாடு உயர் நீதிமன்றங்கள் நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிட்டுள்ளதாகக்கூறி அதை செலுத்த விஜய் மறுத்துள்ளார். அதேசமயம் நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால், வரியை செலுத்த வேண்டுமென வணிகவரித்துறை உத்தரவு பிறப்பித்தது. வணிக வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் நடிகர் விஜய்.

 

அந்த வழக்கில், 20 சதவீதம் நுழைவுவரி செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்ய இடைக்கால உத்தரவு 2012 ஜூலை 17-ல் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 2012 ஜூலை 23ல் 20 சதவீத வரியை செலுத்திய விஜய், வாகனத்தை பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்.இந்நிலையில் இந்த வழக்கு இந்த மாதம் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நடிகர் விஜய் 2 வாரங்களில் வரி செலுத்த வேண்டும், வழக்கு தொடர்ந்ததற்காக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அதை முதல்வரின் நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், வாகன நுழைவுவரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக்கோரியும், அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.