விஜய் சேதுபதி உண்மையிலேயே தமிழ் சினிமாவின் ஆச்சர்ய பேக்கேஜ். ஆல் செண்டர்களிலுமே கெத்து காட்டும் முரட்டுத்தனமான பெர்ஃபார்மர். கதைகளைத் தேர்ந்தெடுப்பதை விட வெயிட்டான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அத்தனையிலுமே தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டே இருப்பவர். இவை மட்டுமில்லாமல் தேவையில்லாமல் எந்த சர்ச்சையிலுமே சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாய் நடைபோடுபவர். ஆனால் ஒற்றை வசனத்தைக் கொண்டு விஜய் சேதுபதியை நோக்கி வசவுக்கணைகளை வீச ஆரம்பித்திருக்கிறார் சர்ச்சை புகழ் எச்.ராஜா.
விஜய் சேதுபதி நடிப்பில் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்ரேன்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் “சீதையை சிறையெடுத்தாலும் கை படாமல் கண்ணியமா நடந்துகிட்டான், அப்போ ராவணன் நல்லவன் தானே? என்ற வசனம் இடம்பெறுகிறது. இந்த வசனத்தைக் கையில் எடுத்துக்கொண்டு விஜய் சேதுபதிக்கு எதிராக முஷ்டியை முறுக்க ஆரம்பித்திருக்கிறார் பாஜக-வின் தேசிய செயலாளர் எச்.ராஜா.
யாரோ பெயர் தெரியாத ஒரு மீம் கிரியேட்டருடைய பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா.
இப்போதிருக்கும் நிலவரப்படி பாஜக என்கிற தேசிய கட்சி, தமிழகத்தை பொறுத்தவரை திரைப்படங்களை விமர்சிப்பதன் மூலமும், எதிர்ப்பதன் மூலமும் தான் தாங்கள் மக்களிடம் போய் சேர முடியும் என்று நினைத்துவிட்டார்களோ? என்று நினைக்கும் அளவிற்கு வரும் அத்தனை திரைப்படங்களையும், நடிகர்களையும் பாடாய் படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
மெர்சலுக்கு முழுக்க முழுக்க தமிழக பாஜக தான் விளம்பரப் பொறுப்பேற்று வேலை பார்த்தது போல், “நல்ல நாள் பார்த்து சொல்ரேன்” படத்தையும் எல்லாப் பக்கமும் கொண்டு போய் எச்.ராஜா சேர்ப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்க்க ஆரம்பித்திருப்பார்கள் இன்னேரம்.