சினிமாவைத் தாண்டியும் விஜய் சேதுபதி போல ஒரு எதார்த்தமான மனிதரை கண்பதரிது. முன்பை விட பேச்சிலும் செயலிலும் அதிக நிதானம் காட்டுகிறார். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கிறார். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல், மனதில் தோன்றியதை ஆழமாக சிந்துத்து கருத்து சொல்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “இங்கே நடக்கும் அரசியல் மாற்றங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்,
“எதைப் பத்தி பேசினாலும், அது சாதியில் வந்து நிக்குது.நீட் பிரச்சனையில் உயிரிழந்த அனிதாவின் விசயத்திலும் அது தான் நடந்தது. இன்னொரு பக்கம் சாதி ஒழிந்துவிட்ட மாதிரியான மாய தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் இங்கே எதுவும் ஒழிந்துவிடவில்லை. மாறாக இன்னும் ஆழமாக அதை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். முக்கியமாக இளைஞர்களிடம் சாதி நிறையவே இருக்கு. அதை விட்டு வெளியே வரவேண்டும் என்ற அறிவு முதலில் நம் எல்லோருக்குள்ளும் வரவேண்டும்.
நமக்குத் தேவை நல்ல மனிதர்கள், நல்ல நண்பர்கள். அதை சாதி, மதம் பார்த்தெல்லாம் தேர்ந்தெடுக்க முடியாது. நம்மைப் பிரிக்க வேண்டும் என எண்ணுபவர்கள் நண்பனாகவும் இருக்க முடியாது.. நல்ல தலைவனாகவும் இருக்க முடியாது” என்று சுருக்கென்று தைக்கும் படி சொன்னார்.