தற்போதுள்ள தமிழ்த் திரைப்பட இளம் நடிகர்களில் எதையுமே தனித்துவமாக செய்யக் கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாகட்டும், பொது விசயங்களுக்கு கருத்து தெரிவிப்பதாகட்டும் எதிலுமே துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்.
அப்படிப்பட்ட விஜய் சேதுபதி தற்போது, நீட் தேர்வினால் மரணமடைந்த மாணவி அனிதாவின் நினைவாக செய்திருக்கும் காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது சம்பந்தமாக விஜய் சேதுபதி வெளியுட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“செய்தியாளர்களுக்கு வணக்கம், நான் விளம்பரப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தேன். இப்போது சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இப்போது நான் நடித்துள்ள விளம்பரத்திற்காக கிடைத்த தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.
கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ள அரியலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 770 அங்கன்வாடிகளுக்கும் தலா 5,000 ரூபாய் வீதமாக 38,70,000 ரூபாயும், தமிழகத்தில் மொத்தமுள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் வீதமாக 5,50,000 ருபாயும், தமிழகத்தின் மொத்தமுள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் வீதமாக 5,00,000 ரூபாயும் மற்றும் அரியலூரில் உள்ள அரசு உதவி பெறும் ஹெலன் ஹெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு 50,000 ரூபாயும் மொத்தம் 49,70,000 ரூபாயும் தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்” என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் சேதுபதி இந்தத் தொகையை மருத்துக் கல்விக்குத் தகுதியிருந்தும் நீட் தேர்வின் காரணத்தால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக வழங்குவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.