full screen background image
Search
Wednesday 18 December 2024
  • :
  • :
Latest Update

‘96’ல் இருக்கும் மூணு ஆறு?

விஜய் சேதுபதி – மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `விக்ரம் வேதா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக விஜய் சேதுபதி `96′ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஜனகராஜ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், வினோதினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இந்த படத்தை இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான், குலுமனாலி, ராஜஸ்தான், கல்கத்தா, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடத்தப்படுகிறது. அதற்காக பாண்டிச்சேரியில் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விஜய்சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது.

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றம், வித்தியாசமான கதாபாத்திரம் என கொடி கட்டிப் பறக்கும் விஜய் சேதுபதிக்கு `96′ படமும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி மூன்று கெட்டப்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 16 வயது, 36 வயது, 96 வயதுகளில் நடிப்பதாக செய்திகள் கசிந்திருக்கின்றன. இதில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி போட்டோகிராபராக வருகிறார். இதுகுறித்த ஒரு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.