தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. எப்படி இவரால் மட்டும் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்று திரையுலகமே வியந்து கிடக்கிறது. ஏற்கனவே சீதக்காதி, ஜுங்கா, சூப்பர் டீல்க்ஸ், 96, செய்றா (தெலுங்கு), மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கைநிறைய படங்களைக் குவித்து வைத்திருக்கிறார்.
இவை இல்லாமல் ஒரு படம் அறிவிப்போடு அப்படியே நின்று கொண்டிருக்கிறது, விஜய் சேதுபதியின் தேதிக்காக. “மாமனிதன்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியின் குருநாதர் சீனு ராமசாமி இயக்குகிறார். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “கண்ணே கலைமானே” படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படம் முடிந்ததும் “மாமனிதன்” வேலைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“மாமனிதன்” படம் பற்றி முக்கியமான செய்தி ஒன்றை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
“மீண்டும் ஒருமுறை இயக்குநர் சீனு ராமசாமியுடன் “மாமனிதன்” திரைப்படத்திற்காக இணைகிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இசையமைப்பாளார் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அவருடன் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கார்த்திக் ராஜா அவர்களும் முதன்முறையாக இணைந்து இசையமைக்க இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையாக இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மூவரும் இணைந்து ஒரு படத்திற்கு இசையமைப்பதால் “மாமனிதன்” திரைப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.