full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“ஜுங்கா” – விமர்சனம்!!

“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், பார்த்துக் கொண்டே இருக்கலாம். விஜய் சேதுபதி – கோகுல் காம்பினேஷனின் அமளிதுமளி தான், தமிழ் சினிமாவின் ஆல்டைம் ஃபேவரைட்டாக மகுடம் சூடிக்கொள்ள காரணமாய் அமைந்தது. அதனால்தானோ என்னவோ, “ஜுங்கா” ஆரம்பித்ததில் இருந்தே பயங்கரமான எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை “ஜுங்கா” நிறைவேற்றி இருக்கிறதா??

படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே “ஜுங்கா” என்கௌண்டர் செய்வதற்காக கூட்டிச் செல்லப்படுகிறான். என்கௌண்டர் செய்யப்படும் அளவிற்கு ஜுங்கா செய்த குற்றம் என்ன? என்பதை ஜுங்காவே சொல்ல ஆரம்பிக்கிற இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ ‘டான்’களை பார்த்திருக்கிறது. ஆனால் இந்த கஞ்ச டான் தமிழ் சினிமாவிற்கு ரொம்ப புதுசு. டான், அசிஸ்டண்ட் டான், டான் அம்மா, டான் பாட்டி என அத்தனை கேரக்டர்களின் நோக்கமும் ஹியூமர்.. ஹியூமர்.. ஹியூமர் மட்டும் தான்.

இடையில் டான் (விஜய் சேதுபதி), ஏன் டானாக மாறினார் என்பதற்கும் ஒரு குட்டி ஃப்ளாஸ்பேக்.. அந்த ஃப்ளாஸ்பேக்கை டான் அம்மா (சரண்யா) விவரிக்கும் போது அப்ளாஸ் அள்ளுகிறார். அம்மா என்றால் அது சரண்யா தான், செம்ம. இந்த காட்சியில் மட்டுமல்லாமல் சரண்யா வருகிற அத்தனை காட்சியிலுமே பிண்ணி பெடலெடுத்திருக்கிறார். அதேபோல் டான் பாட்டியாக வரும் பாட்டியம்மாவும் நொறுக்கி எடுத்திருக்கிறார். அதுவும் சுரேஷ் மேனனிடம் அவர் காட்டும் கெத்து, ஆஸம் பாட்டி.

விஜய் சேதுபதியின் நடிப்பு கொஞ்சம் ஓவர் டோஸாகி விட்டது போன்று தோன்றினாலும், வழக்கமான தனது ட்ரேட்மார்க் நக்கல், நையாண்டியை செவ்வனே செய்திருக்கிறார். கண்டக்டர், லோக்கல் டான், இண்டர்நேஷனல் டான் என ட்ராவல் ஆகிக் கொண்டே இருக்கிறார். நாமும் அவரோடு சேர்ந்து பாரீஸ் வரை மெய்மறந்து போய் விடுகிறோம்.. ஒட்டு மீசை மட்டும் தான் கொஞ்சம் ஒட்டவே இல்லை.

யோகி பாபு.. இந்த மனுஷன் வரவர பன்றதெல்லாம் அப்டியே வொர்க் அவுட் ஆகிறது. கௌண்டர் அத்தனையும் செம்ம பிக்-அப். அதுவும் பாரீசில் சாப்பாட்டுக்காக அவர் படும் பாடு, காமெடிக் கூத்து.

மடோனா, சாயீஷா என இரண்டு கதாநாயகிகள். மடோனாவுக்கு இரண்டு காட்சிகளை மட்டும் ஒதுக்கித் தந்திருக்கிறார்கள், ஆனாலும் அழகு தான். சாயிஷா, டான்ஸ் பட்டையைக் கிளப்புகிறார். விஜய், பிரபுதேவா இருவருக்கும் டஃப் காம்படிஷன் கொடுக்கக் கூடிய கோலிவுட் நாயகி ரெடி.. வெள்ளை வெளேரென்று மைதா மாவு கணக்காக கண்ணை உறுத்துகிற அளவுக்கு அழகாய் இருக்கிறாய், கூடவே நன்றாக நடிக்கவும் செய்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதி மீது காதல் கொள்ளும் இடங்களில் மின்னுகிறார்.

பாடல்களும், பின்னணி இசையும் பின்னோக்கி இழுத்திருக்கின்றன. அதே போல் படத்தின் திரைக்கதையும், கண்ணாபிண்ணா லாஜிக் ஓட்டைகளும் நம்மை படத்திலிருந்து அந்நியப்படுத்துகின்றன. என்னாச்சு கோகுல் சார்?, இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் இப்போ முடிஞ்சிடும், அப்போ முடிஞ்சிடும் என எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி இருக்கிறார்.

“இதற்குத் தானே பாலகுமாரா” – வின் பிளஸ் பாயிண்டே அதன் ரியலிஸ்டிக்கான கதையோட்டம் தான். “ஜுங்கா” என்னதான் கஞ்ச டானாக இருந்தாலும், அது நம்பும்படியாக கொஞ்சம் இருந்திருந்தால், இன்னொரு தரமான சம்பவமாக அமைந்திருக்கும். ஆனால் ஜாலியாக, குதூகலமாக வாய்விட்டு சிரிக்க வேண்டும் என விரும்புவோரை நிச்சயம் “ஜுங்கா” ஏமாற்ற மாட்டான். லாஜிக் கீஜிக் என்று எதையாவது எதிர்பார்த்தீர்கள் என்றால் “பன்னு” தான் கிடைக்கும்..