வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு பின் உடைமாற்றும் அறையில் என்ன நடந்தது என்று விஜய் சங்கர் விளக்கம் அளித்துள்ளார். வீரர்கள் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்று அவர் விளக்கி இருக்கிறார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதன் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் மிகவும் மோசமாக ஆடியுள்ளார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அவரை உடனடியாக அணியைவிட்டு நீக்க வேண்டும் என்று கூட கோரிக்கை வைத்தார்கள். அதற்கு எல்லாம் விஜய் சங்கர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
தற்போது விஜய் சங்கர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். அவர் ”அந்த ஐந்து பந்துகளை நான் விடுவேன் என்று நினைக்கவே இல்லை. அது எனக்கு இப்போதும் கஷ்டத்தை கொடுக்கிறது. ஒருமுறைதான் இப்படி எல்லாம் வாய்ப்பு கிடைக்கும். அதை தவறவிட்டுவிட்டேன்”
மேலும் ”நான் அவுட் ஆன பந்தில் சிக்ஸ் அடிக்கத்தான் முயற்சி செய்தேன். ஆனால் மிஸ் ஆகிவிட்டது. ஒருவேளை அந்த பந்தில் சிக்ஸ் சென்று இருந்தால் எல்லாம் மாறி இருக்கும். அன்றைய நாள் எனக்கு வேறுமாதிரி இருந்திருக்கும். நிறைய பயிற்சி எடுத்தேன். எல்லாம் வீணாகிவிட்டது” என்றுள்ளார்.
அதேபோல் ”எனக்கு இது பெரிய அனுபவத்தை கொடுத்தது. இக்கட்டான சூழ்நிலையில் எப்படி ஆட வேண்டும் என்று இதுதான் எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளது. இதிலிருந்து நான் மீண்டு வருவேன். கண்டிப்பாக இன்னொரு நாள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றுள்ளார்.
மேலும் ”அன்று மேட்ச் முடிந்த பின் டிரெஸ்ஸிங் ரூம் சென்றேன். என்னிடம் யாரும் கோபப்படவில்லை. சக வீரர்கள் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். இப்போதும் கூட என்னை ஊக்குவிக்கிறார்கள். எல்லோருக்கும் இப்படி ஒரு மோசமான சூழ்நிலை வரும் என்று கூறினார்கள். அவர்களுக்கு நன்றி” என்றுள்ளார்.