சினிமா தியேட்டர்கள் திறந்ததும், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை முதன்முதலாக திரையிட தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர்களில் வேலை செய்யும் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இன்னும் 2 வாரங்களில் ஊரடங்கு நிபந்தனைகள் முழுமையாக தளர்த்தப்படும் என்றும், சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைத்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் படம் பார்க்க வருவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுமக்களின் பயத்தைப்போக்க என்ன செய்யலாம்? என்று தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்தை முதன்முதலாக திரையிட்டால் மட்டுமே ரசிகர்களும், பொதுமக்களும் பயம் இல்லாமல் படம் பார்க்க வருவார்கள் என்று தியேட்டர் அதிபர்கள் நம்புகிறார்கள். அதன்படி, விஜய் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தை முதன்முதலாக திரையிடுவது என்று தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.