பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் நடித்த ‘சுறா’ படத்தை தன்னால் இடைவேளை வரைகூட பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார். தன்யாவின் இந்த கருத்து விஜய் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பல வருடங்களுக்கு முன்னால் வெளியான ‘சுறா’ படத்தை தற்போது அவர் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினர். தன்யா குறித்து ஆபாசமான விமர்சனங்களையும் முன் வைத்தனர்.
இதனால், அதிருப்தியடைந்த தன்யா ‘சுறா’ படத்தை குறித்த தனது பதிவை டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டார். இருப்பினும், தொடர்ந்து அவரைப் பற்றி மோசமான கமெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் தன்யா ராஜேந்திரன் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தார். அவர்களும் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் காதுக்கு இந்த விவாகரம் செல்லவே, அவர் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.