full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

மகனைப் பற்றி பேச விரும்பவில்லை : விஜயகாந்த்

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியிருக்கும் மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், இயக்குநர் வெங்கட்பிரபு, படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன், இயக்குநர் / ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா, கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளர் பிரவீன் K.L , நடிகர் சமுத்திரகனி, எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி, Stunner ஷாம், நடன இயக்குநர் சுரேஷ், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் / நடிகர் தேனப்பன், நடிகர் மாரிமுத்து, நடிகர் தம்பிராமையா, நாயகி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், “வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என் மகனைப் பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்கம் கொடுத்து பேசி இருக்கலாம். ஆனால் எல்லோரும் சண்முக பாண்டியன் உயரமாக உள்ளார். அவரிடம் நாங்கள் அனார்ந்து பார்த்து தான் பேசவேண்டி இருந்தது என்று தான் சொல்கிறார்கள். என்னுடைய மனைவி படத்தின் தயாரிப்பாளர் சுப்பு அவர்களை பற்றி நிறைய கூறியுள்ளார். இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்துக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

அவரையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடை தான் நான் முதல் முறையாக பேசும் சினிமா மேடை. நான் தான் மதுரவீரன் படத்தின் கதையை முதலில் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டேன். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. கதையை பற்றி நான் கேப்டனிடம் கூறியதும் இந்த கதையை உடனடியாக கேட்க வேண்டும் என்று கூறினார். அதற்கு காரணம் படத்தில் ஜல்லிகட்டை பற்றி கதை உள்ளது என்பதால் தான். ஜல்லிக்கட்டு நம்முடைய கலாச்சாரம். இந்த காலத்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக தான் முதன் முறையாக ஒன்றாக கைகோர்த்து போராடினார்கள். அதனால் இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறினார் கேப்டன். கேப்டன் விஜயகாந்த் “மதுரசூரன்” எனும் படத்தில் நடித்தார். மதுரவீரன் புரட்சிதலைவர் MGR அவர்களின் டைட்டில். புரட்சிதலைவர் MGR அவர்களின் டைட்டிலில் என்னுடைய மகன் நடிப்பது மகிழ்ச்சியாகவும் , பெருமையாகவும் உள்ளது. மதுரவீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. கேட்டவுடன் மெய்சிலிர்க்கும் வகையில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது தனி சிறப்பு.” என்றார்.

படம் குறித்து இயக்குநர் P.G. முத்தையா பேசிய போது, “மதுரவீரன் திரைப்படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பும் முக்கியமானது. அவர்களின் உழைப்பால் தான் படம் நன்றாக வந்துள்ளது. நல்ல கதை ஒரு படத்தை நன்றாக கொண்டுவரும் என்பது எனது நம்பிக்கை. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் , கவிஞர் யுகபாரதி எழுத்தில் உருவான என்ன நடக்குது பாடல் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. நான் கவிஞரிடம் பட்டுகோட்டையார் பாடல் போன்ற ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டேன். அவரும் நான் கேட்டது போல் அருமையான ஒரு பாடலை கொடுத்துள்ளார். நான் நினைத்தது போல் என்னுடைய நண்பர்கள் அனைவரும் என்ன நடக்குது நாட்டுல பாடலை பட்டுகோட்டையார் பாடல் போல் உள்ளது என்று கூறினார்கள்.” என்றார்.

L.k. சுதீஷ் பேசிய போது, “மதுரவீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற “என்ன நடக்குது நாட்டுல” பாடலை RK இடைதேர்தல் கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க என்று அனைத்து கட்சிக்காரர்களும் பிரச்சாரத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதுக்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி தான். அவருடைய இசையும் யுகபாரதியின் வரிகளும் பாடலை சிறப்பாக கொண்டுவந்துள்ளது.” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “மதுரவீரன் படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதி பின்னணி இசை கோர்ப்பு வேலை முடிந்துவிட்டது. இரண்டாம் பாதி பின்னணி இசை கோர்ப்பு வேலையும் இதை போலவே விரைவில் முடியும் என்று நம்புகிறேன். சண்முகபாண்டியன் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு பிறகு அவருடைய மார்க்கெட் பெரியதாகும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.