full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விக்ரம் வேதா – விமர்சனம்

மாதவன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. குறிப்பாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். இவர் சென்னையில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் விஜய்சேதுபதியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஆனால், விஜய் சேதுபதியோ தானாகவே வந்து சரணடைகிறார். விசாரணையில் மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார் விஜய் சேதுபதி. அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை.

இறுதியில் மாதவன், விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்தாரா? இல்லையா? என்பது விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கியிருக்கிறார்கள்.

விக்ரமாதித்யன் – வேதாளம் கதைதான் படம். விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது தோளில் சுமந்துகொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு புதிர் கதையைச் சொல்லி, அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.

மீண்டும் விக்ரமாதித்யன் வேதாளத்தை துரத்திச் சென்று பிடிப்பான். இது திரும்பத் திரும்ப நிகழும். இந்த பாணியை பின்னணியாக வைத்து, படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும். திரைக்கதையில் எந்த குழப்பமும் இல்லாமல் சிறப்பாக கொடுத்ததற்கு பெரிய கைத்தட்டல். திரைக்கதையில் எந்த இடத்திலும் தோய்வில்லாமல் விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார்கள்.

விக்ரம் வேதா படத்தில் விக்ரமாக நடித்திருக்கிறார் மாதவன். கட்டுமஸ்தான உடலமைப்புடன் கதாபாத்திரத்துக்காகத் தன்னைச் செதுக்கி இருக்கிறார். காட்சிக்கு காட்சிக்கு தான் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். மனைவி ஷ்ரதா ஸ்ரீநாத்துடனான ரொமான்ஸில் சாக்லேட் பாயாக மாறி சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி சொன்ன கதையை கேட்டு விழிக்கும் காட்சியில் அசத்தியிருக்கிறார்.

வேதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முதல் காட்சியிலேயே அப்லாஸ் வாங்குகிறார் விஜய் சேதுபதி. முதல்காட்சி முதல் இறுதி காட்சி வரை திரையை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார். படத்திற்கு படத்திற்கு நடிப்பில் முன்னேற்றம் கொடுத்து தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். சண்டைக் காட்சி, வசன உச்சரிப்பு என அவருக்கே உரிய ஸ்டைலில் கலக்கி இருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு தம்பியாக வரும் கதிர், வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், பிரேம் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மணிகண்டனின் வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக ‘இந்த மில்லு வேலை செய்யறதுக்காக வெச்சிருக்காங்களா, இல்ல நம்மள மாதிரி ஆளுக சண்ட போடறதுக்காக வெச்சிருக்காங்களா?’, ‘முட்டை உடைஞ்சுடுச்சுனா முட்டை உடைஞ்சுடுச்சேனு பதறக்கூடாது, உடனே ஆம்லேட்டு போட்டு சாப்பிட்டு பிரச்னையை முடிச்சடணும்’, ‘போலீஸ் மகன் போலீஸாதான் இருப்பான். கிரிமினல் மகன் கிரிமினலாதான் இருப்பான்றது, என்ன லாஜிக். அப்போ காந்தி அப்பா காந்தியா, கோட்சே அப்பா கோட்சேவா?’ என்ற வசனங்கள் ரசிக்க வைத்திருக்கிறது.

படத்திற்கு பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். படம் முடிந்தும் ‘தனனனனன நா… தனனனனன நா’ என்ற பி.ஜி.எம் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வாய்யும் முனுமுனுத்துக் கொண்டே இருக்கிறது. நிச்சயம் சினிமா உலகில் சிறப்பான இடத்தை பெறுவார் என்று நம்புவோம். வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையையும், பின்னி மில்லையும் அழகாக காண்பித்திருக்கிறார்.

சினிமாவின் பார்வையில் ‘விக்ரம் வேதா’ அதகளம்.