நெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி!!

News

நாகை பிலிம்ஸ் கே.டி.முருகன் தயாரித்து இயக்கியிருக்கும் “வினை அறியார்” படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் இன்று வெளியிடப்பட்டன. பாடல்களுக்கான இசையை அன்பரசுவும், பின்னணி இசையை தஷியும் அமைத்துள்ளனர்.

மூத்த இயக்குநர்- நடிகர் மனோஜ்குமார், சண்முகசுந்தரம், பாடலாசிரியர் விவேகா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

“என் அப்பா அம்மாவிடம் இருந்து எனக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், எனக்குப் பிடிக்காத என்னால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட என் பாட்டி தான் எனக்கு உதவியாக இருந்தார். இந்த மேடையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது அவரது வீட்டில் தான் இருக்கின்றேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் என் பெற்றோரைப் பார்ப்பேன். நான் நாயகியாக நடிப்பதில் என் பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை. இந்தப்படம் வெற்றிபெற்று என் குடும்பம் ஒன்று சேரவேண்டும். ஹீரோ என்னைவிடச் சின்னப்பையனா தெரிகின்றாரே என்று தயங்கினேன். ஆனால், ஸ்கிரீனில் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது..” என்று அறிமுக நடிகையாக கமலி பேசியது மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.

“வினை அறியார் என்று மிகவும் அழகான வார்த்தையைத் தலைப்பாக வைத்திருக்கின்றார், கே.டி.முருகன். தாங்கள் செய்யும் செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகள் தான் வினை. அதை அறியாத விடலைப்பசங்களான நாயகன் நாயகியர் செய்யும் செயல்கள் தான் படம் என்று ஊகிக்க முடிகிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்..” என்றார் விவேகா.

“ தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் நான், செயலாளர் நீங்க. ஆகவே, நான் இயக்கித் தயாரித்திருக்கும் படத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்று வெள்ளந்தியான ஒரு அதிகார தோரணையில் அழைத்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதுபோன்ற எளிமையான கலைஞர்களின் படைப்புகளுக்கு எங்கள் சங்கம் என்றும் துணை நிற்கும்..” என்றார் மனோஜ்குமார்.

“25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக இந்த மேடையில் நிற்கின்றேன். 2012 இல் வங்கக்கரை என்கிற படத்தை எடுத்தேன். போதிய முன் அனுபவம் இல்லாததால், அதனைச் சரியாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஆனால், அதில் கிடைத்த பல அனுபவங்களுடன் வினை அறியார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கின்றேன். ரசிகர்களுக்குப் போர் அடிப்பது போல ஒரு காட்சி கூட இதில் இருக்காது. ஆகஸ்டு 24 ஆம் தேதி இப்படத்தைத் திரையிடவுள்ளேன்..” என்றார் கே.டி.முருகன்.

இப்படத்தில் கோலிசோடா புகழ் முருகேஷ். என்னை அறிந்தால், தனி ஒருவன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜாக், உதயராஜ், குரு, கமலி என்று விடலைப் பசங்களுடன் சிசர் மனோகர், நிர்மலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு அன்பரசு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை தஷி அமைத்திருக்கிறார். ரஞ்சித் ஒளிப்பதிவு செய்துள்ளார். பன்னீர் செல்வம் படத்தொகுப்பை உருவாக்கி இருக்கிறார். கே.டி.முருகன் இப்படத்தை தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.