“ஓகி” புயலின் தாக்கத்தை விட விஷாலின் தாக்கத்தில் திக்குமுக்காடிக் கிடக்கின்றன செய்திகள். “BREAKING NEWS” வெறியர்களுக்கு இரண்டு நாட்களாய் செம்ம தீணியை போட்ட படியே இருந்தனர் விஷாலும், தேர்தல் ஆணையமும். அரசியலில் திடீர் எண்ட்ரியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் நடிகர் விஷால் எகிறி குதிக்க, பற்றிக் கொண்டது விவாத மேடைகள் எல்லாம்.
காணாமல் போன மீனவர்களை விட விஷாலுக்கு இருந்த “ஃபேஸ் வேல்யூ” தான் ஆர்.கே நகர் பரபரப்பிற்கு காரணமாகிப் போனதோ? என்னவோ?. நிலைமைக்கு ஏற்றார்போல் விஷாலை வைத்து கண்ணாமூச்சி ஆடி, யாருக்கோ தன்னை விசுவாசியாக காட்டிக்கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
மதியம் விஷாலின் வேட்புமனு பரிச்சீலனையில் இருப்பதாக தெரிவித்துவிட்டு, மாலையில் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம். விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட எங்கு காணினும் “லைவ்” தெறித்தது. தேர்தல் ஆணையத்திடம் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கூட நேரலையில் வான்வீதியில் பறந்து பரபரப்பேற்றியது. சிறுது நேரத்திற்குப் பிறகு விஷாலின் வாதத்தை ஏற்று, வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.
விஷால் இதனை, “நீதி, நேர்மை, உண்மை ஜெயித்தது” என்று அழகாகவும் ஆக்ரோஷமாகவும் கூறியது தமிழ் அரசியல் வரலாற்றில் பதித்து வைக்க வேண்டியது.
ஒருவழியாக வெற்றி பெற்ற சந்தோஷத்தோடு விஷால் தூங்கப்போன நேரத்தில், இரவு 11 மணிக்கு மேல் வேட்புமனுவை நிராகரித்து அர்த்த ராத்திரியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை விஷாலை மட்டுமல்லாது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முக்கிய கட்சிகளான திமுக, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.