தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ராதாரவி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கில் ஐகோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்படாது என விஷால் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், ராதாரவி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து நடிகர் சங்கம் மற்றும் பொதுச்செயலாளர் விஷாலுக்கு எதிராக ராதாரவி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் எம்.ரவீந்திரன், ‘விஷாலுக்கு காய்ச்சல் என்பதால்,
அவர் வியாழக்கிழமை வரை ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவரால் வரமுடியவில்லை’ என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமைக்கு) தள்ளிவைக்கிறேன். அன்று விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.