ஐதராபாத்தில் நடைபெறும் விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம்

General News

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகே திருமணம் என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகை அனிஷா ஆலா ரெட்டியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார். அன்றைய தினமே விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த செய்தியை உறுதி செய்தார்.

பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். சில மாதங்களாக விஷாலும், அனிஷாவும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்துள்ளனர்.

விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி விஷாலிடம் கேட்டதற்கு திருமண தேதி பின்னர் முறையாக அறிவிக்கப்படும் என்று கூறினார். தனது திருமணம் சென்னையில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும் என்று விஷால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது