ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
முக்கிய தேசிய கட்சியான பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
நடிகர் விஷால், “ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். இன்னும் 2 நாளில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவு எடுப்பேன். நான் முடிவு எடுத்த பிறகு எல்லா விஷயங்கள் பற்றியும் சொல்கிறேன்.” என்று கூறியிருந்தார்.
தற்போது, அவர் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இவரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.