சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று மேலும் 50 வீடுகள் ராட்சத அலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.
தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனையை தருகிறது. இது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சம்பவம் பெரிய செய்தியான பின்னரும் கூட எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது அதைவிட வேதனை.
தமிழக அரசு இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.