ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் விஷால்!!

News

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் உலகமெங்கும் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாக வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

“காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஏற்கனவே கூறி வந்தன. காலா படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து 11 அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில், அம்மாநில திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்துள்ளது.

இதற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் அவர்,

“காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி அவர்கள் பேசியது கருத்துரிமையின் அடிப்படையிலானது. இதற்காக “காலா” திரைப்படத்திற்கு தடை விதிப்பது முறையானது இல்லை. கர்நாடகா ஃபிலிம் சேம்பர் விரைந்து செயல்பட்டு ஒரு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.