சேரனுக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்

News

விஷால் எப்போது நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தாரோ அப்போதிருந்தே அவரைச் சுற்றி வெறும் பிரச்சனைகளே அதிகம் இருந்து வருகின்றன. தயாரிப்பாளர் சங்க தேர்தலிலோ அடிதடி அளவிற்கு உச்சக்கட்டத்தை எட்டியது. தற்போது ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்ததும் உள்ளிருப்பு போராட்டம் என மற்ற தயாரிப்பாளர்கள் இறங்க மீண்டும் பிரச்சனை சூடு பிடித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என சேரன் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில், விஷால் தரப்பிலிருந்து இன்று ஒரு காரசாரமான அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், “இயக்குநர் சேரன் அவர்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன.
ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு.

சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழி வாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத் தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.
எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன்.

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான்.
என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது.

இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்யமான மனோபாவத்துக்கு மாற வேண்டும்.
சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள் படி அவர்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.