சேவை வரியை குறைக்க கோரியும், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வருகிற 30-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிவித்திருந்தார். அதன்படி படப்பிடிப்புகள் உள்பட சினிமா தொடர்பான பணிகள் எதுவும் நடைபெறாது என்று அவர் கூறியிருந்தார்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை என்று ஏற்கெனவே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
இப்படியாக திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒவ்வொரு சங்கத்தினரும் வேலைநிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா? என்ற சூழ்நிலை நிலவியது. அதன் பிரதிபலிப்பாய் வருகிற 30-ந் தேதி முதல் நடக்கவிருந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.