full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

நிர்வாகத் தவறு அல்ல; குற்றம் – விஷால்

கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியிலும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது.

நேற்று அந்த மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவரும், தயாரிப்பாளர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில். “எப்போதெல்லாம் இயற்கை சீற்றங்களான கனமழை, புயல், வெள்ளம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரம் தாக்கி அப்பாவிகள் பலியாகின்றனர்.

பேரிடர் காலங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வறட்சியின்போது விவசாயிகள் பலியாகிறார்கள். அதுவும் தொடர்கதையாகி விட்டது. மழை பெய்தாலும் அப்பாவி மக்கள் தான் பலியாகின்றனர். இதுவும் தொடர்கதையாகி விட்டது.

இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இந்த நிலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க போகிறோம்? தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோமா? இல்லை, அப்பாவிகளை தொடர்ந்து பலி கொடுக்கப் போகிறோமா? இன்னும் சென்னை மாநகரம் சரியான கட்டமைப்பு வசதியைப் பெறவில்லை என்பதைத் தான் இந்த மரணங்கள் காட்டுகின்றன.

இது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் சென்னைக்கு மழை, வெள்ளத்தை தாங்கும் திறன் இல்லை என்றுதான் கூறவேண்டும். அரசு நிர்வாகத்தின் தவறுக்கு இன்னும் எத்தனை அப்பாவி மக்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்? சிறுமிகள் உயிரிழந்தது நிர்வாகத் தவறு அல்ல; குற்றம்.” என்று கூறியுள்ளார்.