விசிறி – விமர்சனம்!

Reviews

சமகாலத்தில் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நிகழும் தல – தளபதி ரசிகர்களின் மோதலை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர்.

முன்காலங்களிலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என ரசிகர்கள் மோதிக் கொண்டாலும் இப்போதிருக்கிற தல – தளபதி ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆயுதமாக முகநூல், டுவிட்டர், ட்ரெண்டிங், வைரல் இவையெல்லாம் கிடைத்திருக்கிறது. இதை பிரமாதமாக கதை செய்து, இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையை உள்ளது படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.

சென்னையில் வசிக்கிர அஜித் ரசிகன், நண்பர்களோடு ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறான். தினமும் முகநூலில் தலபுராணம் பாடும் இவனுக்கும், மதுரையில் இருக்கும் விஜய் ரசிகனுக்கும் அதே முகநூலில் மோதல் ஏற்படுகிறது. இருவருமே நேரில் சந்தித்து பழி தீர்த்துக் கொள்ளும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், தல ரசிகனை பெண் ரசனை இல்லாதவன் என நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள். அதனால் எப்படியாவது ஒரு பெண்ணை “மடக்க” வேண்டும் என நினைக்கிறான். அவன் நினைத்த மாதிரியே வெளியூரிலிருந்து புதிதாக ஏரியாவுக்கு வரும் ஒரு பெண்ணுடன் மோதலாகி நட்பாகிறது. அந்த நட்பை காதலாக உணர்கிறான், அதே சமயம் அவள் ஒரு விஜய் ரசிகை என அறிந்ததும் அதிர்கிறான். அவளது அண்ணனை குறித்து பெருமையாக சொல்லும் போது ஒருவேளை அவன் தன்னுடன் முகநூலில் சண்டை போடும் விஜய் ரசிகனாக இருந்துவிடுவானோ என அஞ்சுகிறான்.

அவன் நினைத்தது போலவே அவளது அண்ணனாக விஜய் ரசிகனாக வருகிறான். மோதல் வெடிக்கிறது. அந்த சண்டையையும் முகநூலில் வைரலாகிறது. போலீஸ் கேஸாகி, பஞ்சாயத்து முடிந்து அவரவர் ஊருக்கு போகிறார்கள். திடீரென்று முகநூலில் ஆபாசமாக படமெடுத்து பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் அந்த பெண் மாட்டிக் கொள்கிறாள். அவளுக்காக தல ரசிகனும், தளபதி ரசிகனும் ஒன்றினைகிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ரசிகர்கள் பட்டாளத்தையுமே ஒன்றினைக்கிறார்கள். இறுதியில் என்னானது என்பதே மீதி படம்.

அடித்துக் கொண்டு பிரிந்து கிடக்கும் ரசிகர்கள் ஒன்றிணைந்தால் எவ்வளவு நல்ல காரியங்களை செய்யலாம் என காட்டியிருக்கிறார்கள் படத்தில். இதற்காகவே இளைஞர்கள் இந்தப்படத்தை பார்க்கலாம்.

ராஜ் சூர்யா, ராம் சரவணன் என இருவரும் தல – தளபதி ரசிகர்களாக அப்படியே நடித்திருக்கிறார்கள். விஜய் ரசிகையாக ரமோனா கலக்கியிருக்கிறார்.

தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

தல-தளபதி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது எல்லா ரசிகர்களுக்குமான படம் இந்த “விசிறி”!