முதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த கலைஞனுக்கு வாழ்த்துகள். இத்தனை வயதில் இப்படி ஒரு படத்தில் துடிப்புடன் நடிப்பது என்பது எல்லோராலும் முடிந்து விடுகிற காரியமில்லை. தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துப் போவதற்கான முயற்சியில் கமல் எப்போதுமே, இங்கிருப்பவர்களில் ஒரு முன்னோடி தான் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
தொழிற்நுட்பம் ஆகட்டும், திரைமொழி ஆகட்டும் இரண்டிலுமே ஹாலிவுட் சினிமாவிற்கு நிகரான சினிமாவாக ஈடு கொடுத்திருக்கிறது இந்த “விஸ்வரூபம் 2”. முந்தைய பாதியில் தாலிபன் தீவிரவாதி முல்லா ஓமரிடம் இருந்து தப்பிக்கிற கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ஷேகர் கபூர் ஆகியோர் விமானத்தில் லண்டனுக்குப் போவது போல் ஆரம்பிக்கிறது “விஸ்வரூபம் 2”.
முந்தைய பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கும், கமலுக்கும் என்ன தொடர்பு? என்பதில் ஆரம்பித்து, ஆப்கானிஸ்தானுக்குள் எவ்வாறு இந்திய உளவாளியான கமல் போனார்? என்பது உட்பட பல கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறது இரண்டாம் பாகம்.
தன் அடையாளங்களை மறைத்து வாழும் ரகசிய உளவாளி, இளைஞர்களை பயங்கரவாதிகளாக உருமாற்றும் அல்கொய்தா பயிற்சிப் பட்டறை, சீசியம் கட்டப்பட்ட கதிர்வீச்சுப் புறாக்கள் என முந்தைய பாகங்கள் தாங்கி நின்ற பல புதுமையான விசயங்கள் ஏதும் இரண்டாம் பாகத்தில் இல்லை. இடைவேளைக்கு முன்பு வரும், இரண்டாம் உலகப்போரின் போது கடலுக்கடியில் 1500 டன் வெடி பொருட்களுடன் மூழ்கிய போர்க்கப்பல் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் அதுவும் டக்கென முடிந்து போக படம் தொங்க ஆரம்பித்து விடுகிறது.
மீண்டும் ஓமர் கையில் ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் சிக்கிக் கொள்ளும் போது சூடு பிடிக்கத் தொடங்குகிறது கதை. ஆண்ட்ரியாவின் முடிவு நிஜமாகவே பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தனித்தனி இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கமல் மற்றும் பூஜா குமார் இருவரில் யார் உயிர் பிழைப்பார் என்ற பதற்றம் இருக்கையில், வழக்கமான தெலுங்கு-தமிழ் சினிமா பாணியில் சப்பையாக முடிப்பது உறுத்துகிறது. ஆனால், அந்த ஸ்டண்ட்.. செம்ம!!
கிளைமாக்ஸில் ஓமரின் மனைவி, இரண்டு மகன்கள் உட்பட குழந்தைகளையும் பெண்களையும் அமெரிக்க ராணுவம் காப்பாற்றி அகதிகளாக அமெரிக்காவிற்கு கூட்டிப் போவது போலவும்.. தீவிரவாதியான நாசர் 10 தாலிபன் குழந்தைகளை, “இந்த மண்ணில் தான் இவர்கள் சாக வேண்டும்” என சுட்டு வீழ்த்துவது போலவும்.. காட்சிப் படுத்தியிருப்பதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை என்று நம்புவோம்.. அமெரிக்க ராணுவம், அவ்ளோ நல்ல ராணுவமா கமல் சார்?.
அதே போல கமல் விஸ்வநாதனா? விஸாமா? என்பதையும் கடைசி வரை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திடீர் திடீரென பிராமண தமிழ் பேசுவதும், திடீரென “யா அல்லாஹ்” என்பதும் நம்மை குழப்பிக் கொண்டே இருக்கிறது.
பின்னணி இசையில் வழக்கம் போல மிரட்டி இருக்கிறார் முகமது ஜிப்ரான். சனு வர்கீஸ் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் பளிச். மகேஷ் நாராயணனின் எடிட்டிங் நேர்த்தியாய் கத்தரி பாய்ச்சி இருக்கிறது. அவரது பணியை சென்சார் அதிகாரிகள் செய்ததில் அவருக்கு நிச்சயம் சந்தோசம் இருக்காது. மொத்தம் 22 இடங்களில் கத்தரி என்றால் சும்மாவா?
கமலின் தத்ரூபமான நடிப்பு, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழிற்நுட்பங்களின் அசத்தலில் “விஸ்வரூபம் 2” நிமிர்ந்து நிற்கிறது.