“வெப்பன்” திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’ (Weapon). இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சாதாரண மனிதர்களை தாண்டி சூப்பர் சக்தியுடன் சூப்பர் ஹியூமன் நபர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று நம்பும் வசந்த் ரவி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மேலும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார். மறுபுறம் பிளாக் சொசைட்டி அமைப்பு நடத்தி வருகிறார் ராஜீவ் மேனன். மேலும் மனிதர்கள் மீது தனது ஆராய்ச்சியை நடத்தும் கொடூர வில்லனாக இருக்கிறார். தேனியில் ஒரு விநோத சம்பவம் நடக்க அதனை தனது சேனலுக்காக தேடி செல்கிறார் வசந்த் ரவி. தனது சீக்ரெட் சொசைட்டி நபர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க, அதற்கு சூப்பர் ஹியூமன் தான் காரணம் என நினைத்து அந்த நபரை கண்டுபிடிக்க தனது ஆட்களை அனுப்புகிறார். இரண்டு குழுக்களும் ஒரு புள்ளியில் சந்திக்க தேனியில் அமைதியாக வாழ்ந்து வரும் சத்யராஜுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை சொல்லும் படம்தான் வெப்பன்.
வசந்த் ரவி யூடியூபராக சூப்பர் ஹியூமனை தேடிச் செல்பவராக முதல் பாதியில் வருகிறார். அந்த சூப்பர் ஹியூமன் பவர் கிடைத்தால் அதனை வைத்து இயற்கையை அழிப்பவர்களை தடுக்கலாம் என நினைக்கிறார். முதல் பாதியில் ஒரு சாதாரண கேரக்டராக வரும் இவர் இரண்டாம் பாதியில் மிரள வைக்கிறார். சில இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங் நெருடல். தன்யா ஹோப் கதாபாத்திரத்தில் அழுத்தமில்லை. சத்யராஜ் கதாபாத்திரத்தை முதல் பாதியில் தேட வேண்டியுள்ளது. சூப்பர் ஹியூமன் என சொல்லப்படும் அவரது கதாபாத்திரம் நகைப்பை வரவழைக்கிறது. இவரது செயல்கள் நமக்கு பழைய ஹாலிவுட் படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. சூப்பர் ஹியூமன் சீரம் என காதில் பூ சுற்றுகிறார்கள். எமோஷனல் காட்சிகளில் சத்யராஜ் நம்மை நெகிழ வைக்கிறார். ஃபிளாஷ் பேக் காட்சிகளில் ஏஐ காட்சிகளில் சத்யராஜை தேட வேண்டியுள்ளது.
சீக்ரெட் சொசைட்டி தலைவராக இயக்குநர் ராஜீவ் மேனன் நடிப்பு நன்று. ராஜீவ் பிள்ளை ஆஜானுபாகுவான உடல்வாகில் கவர்கிறார். மற்ற நடிகர்களின் நடிப்பும் ஓகே ரகம். இதுபோன்ற படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் சற்று நன்றாக இருந்திருந்தால் இன்னும் படத்துடன் ஒன்ற வைத்திருக்கும். முக்கிய விஷயங்களை வசனங்கள் மூலமே வெளிப்படுத்தி இருப்பது அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் தாண்டி பின்னணி இசை நன்றாக உள்ளது. பிரபு ராகவின் ஒளிப்பதிவும் ரசிக்கும் வகையில் உள்ளது. இரண்டாம் பாதியும் சோதிக்கிறது. நல்ல கதையை யோசித்த இயக்குனர் குகன் அதனை திரைக்கதையாக்க உருவாக்குவதில் சற்று தடுமாறி உள்ளார். மொத்தத்தில் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வெப்பன் – தாக்கமில்லை. ரேட்டிங் 3/5.