கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பேசி உள்ளார். அவர் கூறியதாவது: ‘’ஊரடங்குக்கு பிறகு ஒரு நடிகையாக எந்த மாதிரி நிலைமைகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஊரடங்கு முடிந்ததும் நாம் நடிக்கும் படங்கள் நிலைமை, வியாபாரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
இன்னும் எந்த மாதிரி விளைவுகளை சந்திக்க போகிறோம் என்பதையும் இப்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. சில படங்களை தியேட்டர்களில் பார்த்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறாக இருக்கிறது. கொரோனாவால் எதிர்காலத்தில் டிஜிட்டல் தளத்துக்கு சினிமா மாறும் என்றுதான் தோன்றுகிறது. நடிகையாக நான் ஜெயித்து விட்டேன். தொடர்ந்து நடிக்கிறேன்.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் டிஜிட்டல் தளத்துக்கு செல்ல தயாராகவும் இருக்கிறேன். ஆனாலும் சினிமாவில் நான் சாதிக்க வேண்டியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கிறது. தலைவி படத்தில் விரும்பி நடித்துள்ளேன். இந்த படத்துக்காக நிறைய உழைத்தும் இருக்கிறேன்.
நான் நடிக்கும் படங்களை தியேட்டர்களில் பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன். இப்போதுள்ள நிலையில் தியேட்டர்களில் எப்படி படம் பார்க்க போகிறோம் என்பதை யூகிக்கவே முடியவில்லை.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.