இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கிற மருத்துவக் கல்லூரிகளும், அந்தக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளும் தான்.
ஒரு காலத்தில் நுழைவுத் தேர்வு என்றால் என்னவென்றேத் தெரியாமல், மருத்துவப் படிப்பின் பக்கம் வராமல் இருந்த கிராமப் புற எளிய மாணவர்களின் நலன் கருதி அந்த நுழைவுத் தேர்வையே ரத்து செய்தவர்கள் நாம். அதனால் தான் எந்தத் தடையும் இன்றி நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே போதும் என்கிற மனதைரியம் மாணவர்களுக்கு இருந்தது.
தமிழகத்தில் இருக்கிற மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 30. அவற்றுள் கொட்டிக் கிடக்கிற மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்கள் கிட்டத்தட்ட 3,500-க்கும் மேல். ஆண்டொன்றிற்கு சுமார் 60% அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையிலான மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து இந்த மருத்துவ இடங்களுக்குத் தேர்வாகினறனர்.
இப்படி வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஏழை, எளிய மாணவர்கள் கூட மருத்துவம் படிக்கலாம்.. மருத்துவர் ஆகலாம்.. என்கிற நிலைதான் பலரது கண்களை உறுத்தியிருக்கிறது. பல நாள் காத்திருப்பு, தீவிரமான திட்டமிடல் இவையில்லாமல் இந்த மாபெரும் கல்வி வளத்தை சுரண்டுதல் எளிதானது அல்ல என்பதனை உணர்ந்து, சரியான நேரம் பார்த்து ஏவியது தான் இந்த “நீட்” என்னும் அரக்கன்.
அந்த அரக்கன் பிள்ளைக்கறி திண்ணும் என்பதறிந்தே அதை மாநிலத்திற்குள் எதிர்ப்பே இல்லாமல் நுழையவிட்டு விட்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர் ஆட்சியாளர்கள். என்ன செய்வது, ஏது செய்வது என நல்ல மனங்கொண்ட ஏனையோர் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே தன்னந்தனியாக உச்சநீதி மன்றம் வரை சென்று போராடித் தோற்றார் அரியலூர் அனிதா. தனது கனவை கடுமையாக உழைத்து எட்டிப்பிடித்த பின்னாலும், யாரோ அதனை தட்டிப் பறிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னையே மாய்த்துக் கொண்டார் அவர்.
அதன் பின்னர் தான் இந்தத் தமிழகம் “நீட்” என்பதன் விபரீதத்தை உணரத் தொடங்கியது. மாணவர் போராட்டமும் வெடித்தது. ஆனாலும் பயணில்லை. தமிழகத்தில் உரிமைகளை பறிபோவதைப் பற்றி கவலை கொள்ளாத நம் ஆட்சியாளர்களோ, பதவிகளை தற்காத்துக் கொள்வதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். விளைவு அந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மிக சொற்பமானவர்களே தேறினார்கள்.
அடுத்தடுத்த பிரச்சினைகள், அதையொட்டிய கொந்தளிப்புகளில் “நீட்” என்பதை எல்லோரும் மறந்து போனார்கள். பெற்றோர்களோ வேறு வழியே இல்லாமல் தங்கள் குழந்தைகளை பயிற்சி மையத்திற்கு அனுப்பத் தொடங்கினார்கள். அரசு உதவாது என அறிந்த குழந்தைகளும் தேர்விற்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள தயாரானார்கள்.
இங்குதான் தனது கோர முகத்தையும், நீண்ட நாள் வன்மத்தையும் தீர்த்துக் கொள்வதற்கு யாருமே எதிர்பார்த்திராத ஒரு காரியத்தை செய்தது இந்திய ஒன்றியத்தின் அரசு. இத்தனை மருத்துவக் கல்லூரிகள் கொட்டிக் கிடக்கிற இந்த தமிழகத்தில் மாணவர்கள் தேர்வெழுதுவதற்கு மையங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என விளக்கமளித்து ராஜஸ்தானிலும், கேரளாவிலும் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். இதில் மேலும் வேதனை தருவது என்னவெனில், 6-ஆம் தேதி தேர்விற்கு 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இதனை தெரிவித்திருப்பது தான்.
ஒவ்வொரு பிஞ்சு நெஞ்சிற்கும் எவ்வளவு பெரிய இடி?. தங்கள் குழந்தையை எப்படியாவது மருத்துவராக பார்த்து விட வேண்டும் என கனவு சுமந்த பெற்றவர்களுக்கு எத்தனை பெரிய வலி?. வழக்கம் போல மக்களும், அதிகாரம் அற்றவர்களும் மட்டுமே இதற்கு எதிராக பேசிக்கொண்டிருக்க.. அதிகாரம் கொண்டவர்களோ எந்த உணர்வுமற்றவர்களாக சப்பைக்கட்டுக் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
“இந்தத் தேர்வே வேண்டாம்” என்று குரல் கொடுத்த மாணவர்கள், “தயவுசெய்து தமிழகத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கித் தாருங்கள்” எனக் கெஞ்ச வைத்து, அதனை மௌனமாய் ரசித்துக் கொண்டிருப்பது எவ்வளவு குரூரமானது?. தங்களது இந்த மோசமான காரியத்தால் பல தமிழக மாணவர்களின் கனவில், ஆசையில், லட்சியத்தில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது இந்த அரசு.
இந்த வருடம் வேறு எதுவுமே செய்வதற்கில்லை என்கிற கையறு நிலைக்கு நாமெல்லாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் அடுத்த வருடம் நமது பிள்ளைகளை இந்த “நீட்” என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. கல்வியைப் போல செல்வம் இல்லை என்பது நாம் உலகிற்குச் சொன்ன வாக்கு. அப்படியாகப்பட்ட விலைமதிப்பில்லாத செல்வத்தை யாருக்கோ தாரை வார்க்கவா இங்கே இவ்வளவு கட்டமைப்புகளும்?? நாம், நமது உழைப்பால் நமது வரிப்பணத்தில் நமது பிள்ளைகளுக்காக கட்டி வைத்திருக்கும் கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்க இயலாது எனும் போது அமைதி காப்பது நியாயமாகாது. இன்னும் சொல்லப் போனால் நமக்கு காவேரியும், கல்வியும் ஒன்று தான். இரண்டுமே இங்கு தடைகளின்றி எல்லோருக்குமானதாய் பாய்ந்தோட வேண்டும்.
ஆதலால், நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு கமல்ஹாசன் சொல்வது போல் “நீட் இங்கேயே நடத்த ஆவன செய்ய வேண்டும்” என்பதாக இல்லாமல்.. பா.இரஞ்சித் சொல்வது போல் “நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும்” என்பதாகவே இருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட. காரணம், விஷம் என்பதை வாய்வழியே ஊற்றினாலும் விஷம் தான்.. காது வழியே ஊற்றினாலும் விஷம் தான். நாம் இந்த விஷமே வேண்டாம் என்போம்..
“நீட்” என்னும் அரக்கனே ஓடிப்போ!!