இனியாவது மாறுவார்களா? : தங்கர் பச்சான்

News

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலத்தைப் போல, மேலும் பலப்பல கிராமங்களை அழிக்கத் திட்டம் போட்டு முடித்து விட்டார்கள். இனி இதே மாதிரி ஒவ்வொரு கிராமத்திலும் நாம் சென்று போராடிக் கொண்டிருக்க முடியுமா?

வளர்ச்சி என்னும் பேரில் விவசாயத்தையும், மக்களையும் அழிக்கும் திட்டத்திற்கு துணையாக இருந்து கையெழுத்துப் போட்டவர்கள், தடுக்க அதிகாரம் இருந்தும் சொந்த நலனுக்காகத் தடுக்காமல் இருப்பவர்கள் யார் யார் என்பது இப்போது அந்த கிராம மக்களுக்கு நன்றாகவேத் தெரிகிறது. இருந்தும் அடுத்த மாதமே தேர்தல் வந்தாலும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவர்களை அழிக்கும் அப்படிப்பட்ட கட்சிகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது எதற்காக இதற்கு போராட வேண்டும் என்ற எண்ணமே மிஞ்சுகிறது.

இதே தான் தமிழகம் முழுக்க உள்ள பெரும்பாலான வாக்காளர்களின் மன நிலை. இந்த மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சியைப் பெறாதவரை நாளுக்கொரு போராட்டத்தை நாம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டியது தானா? யாருடைய நலனுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வார்களா?” என்று குறிப்பிட்டுள்ளார்.